கொரோனா வைரஸை தடுக்கும் கோவிஷீல்டு தடுப்பு மருந்து புனேவில் உள்ள சீரம் இன்ஸ்டிட்யூட்டில் தயாரிக்கப்பட்டது. சீரம் நிறுவனத்திடம் இருந்து முதற்கட்டமாக 1.10 கோடி கோவிஷீல்டு தடுப்பூசி டோஸ்களை வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.
மத்திய அரசின் அதிகாரிகள் நடத்திய ஆய்வின்படி தமிழகத்திற்கு 5,56,500 தடுப்பு மருந்துகள் ஒதுக்கப்பட்டுள்ளன. முதற்கட்டமாக தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள 5,36,500 கோவிஷீல்ட், 20,000 கோவாக்ஸின் தடுப்பு மருந்துகள் இன்று சென்னைக்கு அனுப்பப்பட்டன.
அந்த மருந்துகள் பூனேவிலிருந்து இன்று காலை 8.45 மணிக்கு சென்னைக்கு கோ ஏர் பயணிகள் விமானத்தில் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அந்த விமானம் இன்று காலை 10.22 மணியளவில் சென்னை உள்நாட்டு விமான முனையத்திற்கு வந்து தரையிறங்கியது.
கொரோனா வைரஸ் தடுப்பு மருந்துகளை பெற்றுக்கொள்ள தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் சென்னை விமான நிலையத்தில் தயாராக இருந்தனர். அதோடு மருந்துகளை பாதுகாப்பாக எடுத்துச் செல்ல குளிா்சாதன வசதிகளுடன் கூடிய கண்டெய்னர் லாரிகளும் விமானநிலையத்தின் உள்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்தன.
இந்த விமானத்தில் வந்த பயணிகள் அனைவரும் இறங்கிச் சென்றபின்பு, மருந்துகள் அடங்கிய பெட்டிகள் விமானத்திலிருந்து குளிா் சாதன கண்டெய்னர்களுக்கு மாற்றப்பட்டன.
அதன் பின்பு தடுப்பு மருந்துகள் கொண்ட 5 கண்டெய்னர்களையும் விமான நிலையத்தில் இருந்து டி.எம்.எஸ் வளாகம் மற்றும் கிடங்குக்கு கொண்டு செல்லும் பணியை பொது சுகாதாரத்துறையின் இணை இயக்குநர் வினய் கண்காணித்தார்.
கொரோனா தடுப்பு மருந்துகள் ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் இன்று மாலை பிரித்து வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 16ம் தேதிக்குள் தடுப்பூசிகளை கிடைக்குமாறு திட்டமிடப்பட்டுள்ளது.