கொரோனா தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் கடந்த மார்ச் மாதம் முதல் நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து அவ்வப்போது தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அன்லாக் 5.0 எனப்படும் 4வது கட்ட தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வழிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி, தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அக்டோபர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஐந்தாம் கட்ட தளர்வு வழிகாட்டுதல்களின்படி, வரும் அக்டோபர் 15-ம் தேதி முதல் 50 சதவீத இருக்கைகளுடன் தியேட்டர்கள், மல்டிப்ளக்ஸ் அரங்குகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 15-க்கு பின் பள்ளி, கல்லூரிகள் திறப்பு குறித்து அந்தந்த மாநில அரசுகளே முடிவு எடுத்துக்கொள்ளலாம். மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்களின் ஒப்புதல் பெறவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீச்சல் குளங்கள், பொழுதுபோக்கு பூங்காக்களும் திறக்க அனுமதி அளிக்கப்படும் எனவும், மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு இடையே போக்குவரத்திற்கு கட்டுப்பாடு விதிக்கக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் அக்டோபர் 31 வரை ஊரடங்கு தொடர்ந்து நீடிக்கும் என மத்திய அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.