சுகாதார செயலர் ராஜேஷ் பூஷன், ஐ.சி.எம்.ஆர் இயக்குநர் பல்ராம் பார்கவா உள்ளிட்ட மத்திய அரசின் கொரோனா மேலாண்மைக் குழுவினர் இன்று டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷண் கூறுகையில், “இந்தியாவில் கொரோனாவிலிந்து 51 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். இது உலகிலேயே அதிகம். ஐ.சி.எம்.ஆரின் இரண்டாவது ‛சீரோ சர்வே' அறிக்கைப்படி, குறிப்பிடத்தக்க மக்கள் கொரோனாவினால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது தெரியவந்துள்ளது.
கொரோனாவினால் பாதிக்கப்பட்ட 10 லட்சம் பேரில் ஏற்படும் உயிரிழப்பில், இந்தியாவில் தான் குறைவாக உள்ளது. இந்தியாவில் செப்டம்பர் மாதம் வரை 2.97 கோடி கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.” எனத் தெரிவித்தார்.
ஐ.சி.எம்.ஆர் இயக்குநர் பல்ராம் பார்கவா கூறுகையில், “ஐ.சி.எம்.ஆர் ஆய்வின்படி, குறிப்பிடத்தக்க அளவு மக்கள் கொரோனாவால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது அவசியம். இதற்காக 5 வழிகளை (Test, Track, Trace, Treat & Technology) பின்பற்ற வேண்டும்.
கடந்த மாதம் நடத்திய சமூகப் பரவல் ஆய்வில் 15 பேரில் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளனர். நகர்ப்புறங்களில் 15.6% பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு குணமடைந்திருக்கலாம். சிறு நகரங்களில் 8.2% பேருக்கும், கிராமப்புறங்களில் 4.4% பேருக்கும் கொரோனா வந்து குணமடைந்திருக்கலாம்” எனத் தெரிவித்தார்.
நிதி ஆயோக் தலைவர் வி.கே.பால் கூறுகையில், “குளிர்காலத்தில் நுரையீரல் சம்பந்தப்பட்ட சுவாச நோய்க்கிருமிகளின் தாக்கம் பொதுவாக அதிகமாக இருக்கும். எனவே, அந்த நேரத்தில் கொரோனா பரவல் அதிகரிக்க வாய்புள்ளது. எனவே தீபாவளி உள்ளிட்ட பண்டிகைக் காலங்களில் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும். மாஸ்க் அணியாமல் எந்தக் கொண்டாட்டங்களிலும் ஈடுபடக்கூடாது” என எச்சரித்தார்.