கொரோனா தடுப்பூசி உலகம் முழுவதும் பரவலாக மக்களுக்கு செலுத்துவதற்கு முன்னால் உலகம் முழுவதும் கொரோனாவுக்கு பலியாவோர் எண்ணிக்கை 20 லட்சத்தைத் தாண்டுவதற்கு வாய்ப்பு உள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில், இதுதொடர்பாக உலக சுகாதார அமைப்பின் அவசரக் காலப் பிரிவுத் தலைவர் மைக்கேல் ரையான் கூறுகையில், “கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியைப் பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வருவதில் உலக நாடுகள் அனைத்தும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
உலக நாடுகள் அனைத்தும் சேர்ந்து அந்த முயற்சியை எடுக்காவிட்டால்; கொரோனா நோய்த்தொற்றுக்குப் பலியாவோரின் எண்ணிக்கை தற்போது இருப்பதைவிட தீவிரமாக அதிகரிக்கும். அதாவது, கொரோனா தடுப்பூசி அறிமுகமாவதற்கு முன்னால், நோயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது உள்ளதைவிட இரு மடங்காக அதிகரிக்கக்கூடும்.
மேலும், பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டுவதற்கான வாய்ப்புள்ள நிலையில், தடுப்பூசி கண்டறிவது மட்டுமின்றி கொரோனா எதன் மூலம் எதன் வழியாக பரவுகிறது என்பதை கண்டறிய வேண்டும்.
அதுமட்டுமல்லாது, உலக நாடுகள் அனைத்தும் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களைத் தனிமைப்படுத்துவது, சமூக இடைவெளி, முகக் கவசம் அணிதல், கைகளை அடிக்கடி கழுவாதல் போன்ற அனைத்து பாதுகாப்பு முறைகளையும் முழுமையாகப் பின்பற்ற வேண்டியது கட்டாயம்” எனத் தெரிவித்துள்ளார்.