இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை கடந்த 24 மணி நேரத்தில் 75,083 அதிகரித்துள்ளது. கொரோனா இறப்புகள் 1,053 ஆக அதிகரித்துள்ள நிலையில், இந்தியாவின் கோவிட் -19 எண்ணிக்கை 55 லட்சத்தைத் தாண்டியுள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில்,
இந்நாள்வரை நாட்டில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 55,62,664 ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையில் 44,97,868 போ் இதுவரை தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். இந்தியாவில் செவ்வாய்க்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் மட்டும் 1,053 போ் உயிரிழந்தனர். இதனால் நாட்டின் மொத்த கொரோனா உயிரிழப்பு 88,935 ஆக அதிகரித்துள்ளது. இந்தநிலையில் தற்போது 9,75,861 போ் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மாநிலங்களில் மகாராஷ்டிரா தொடர்ந்து மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள மாநிலமாகத் தொடர்கிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையில் 2,91,630 தொற்றாளர்களுடன் உள்ளது மகாராஷ்டிரா.
தமிழ்நாட்டில் கடந்த ஒரு மாதமாக ஒரே அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கணக்கு காண்பிக்கப்பட்டு வருகிறது. செவ்வாய்க்கிழமை நிலவரப்படி கொரோனா தொற்றால் 5,516 பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,41,993 ஆக உயர்ந்துள்ளது. இதில் தற்போது 46703 பேர் மட்டுமே தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருவதாகக் கணக்கு காண்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) அறிக்கையின்படி, கொரோனாவுக்கு செப்டம்பர் 21 வரை நாடு முழுவதும் 6,53,25,779 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இவற்றில் 9,33,185 மாதிரிகள் நேற்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.