கொரோனாவின் தாக்கம் உலகம் முழுவதும் அதிகரித்து வரும் நிலையில் உலக நாடுகள் அனைத்தும் அதற்கு மருந்து கண்டுபிடிப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்தநிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது.
இந்நிலையில் பொதுமக்கள் மட்டுமின்றி விளையாட்டு வீரர்கள், திரையுலக பிரபலங்கள் என பலரும் கொரோனா பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.
இந்த நிலையில் முன்னாள் மல்யுத்த வீரரும் பிரபல ஹாலிவுட் நடிகருமான டுவைன் ஜான்சன் (எ) தி ராக், அவரது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டுள்ளனர்.
இதையடுத்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு காணொளி ஒன்றை உலக மக்களுக்குப் பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, தனக்கும் தனது மனைவி லாரன் மற்றும் தனது மகள்களான ஜாஸ்மின் மற்றும் டயானா ஆகியோருக்கு 2 வாரங்களுக்கு முன்பு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது என்றும், குடும்பமாகப் பாதிக்கப்பட்டபோது சவாலாக இருந்ததாகவும் கூறியுள்ளார்.
மேலும் "எங்களுக்கு இனி தொற்றுநோய் இல்லை, நாங்கள் கடவுளுக்கு நன்றி கூறுகிறோம், நாங்கள் ஆரோக்கியமாக இருக்கிறோம்” எனத் தெரிவித்தார்.