நாட்டில் கொரோனா தொற்றால் அதிகப்படியாக பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் குஜராத்தும் ஒன்று. அங்கு இதுவரை 65 ஆயிரத்து 704 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 2,529 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்திருக்கிறார்கள்.
இந்நிலையில், கடந்த மாதம் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உயிரிழந்தார் சாமியார் புருஷோத்தம் பிரியதாஸ். தற்போது அவரிடம் பிரசாதம் வாங்கி உட்கொண்ட பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சாமியார் புருஷோத்தின் கொரோனா சோதனை முடிவுகள் வருவதற்கு முன்பு, பக்தர்களுக்கு தன்னுடைய எச்சில் கலந்த பிரசாதத்தை அளித்துள்ளார். இதுதொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் தீயாய்ப் பரவி வருகிறது.
ஏற்கெனவே சாமியார் உள்ளிட்ட 10 பேருக்கு கொரோனா இருந்ததாக தெரிவிக்கப்பட்டது. பெரும் மருத்துவப் போராட்டத்துக்கு பிறகு சிகிச்சை பலனளிக்காமல் சாமியார் கடந்த மாதம் உயிரிழந்தார்.
இந்த வீடியோ வைரலானதை அடுத்து அந்தக் கூட்டத்தில் பங்கேற்ற பலருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கும் என சுகாதாரத்துறையினர் நம்புகிறார்கள். இதனால் அவர்கள் அனைவரையும் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கொரோனா பரவும் என்பதாலேயே உலகம் முழுவதும் உள்ள அனைத்து வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டுள்ளன. தளர்வு அளித்தாலும் மக்கள் அதிகம் கூடும் மத வழிபாட்டு தளங்களுக்கு அரசுகள் அனுமதியளிக்க மறுத்து வருகின்றன.
இப்படி இருக்கையில், அரசின் நெறிமுறைகளை கடைபிடிக்காமல் குஜராத் சாமியார் கூட்டம் கூட்டி தொற்று பரவலை அதிகபடுத்தியது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இதுபோன்ற அர்த்தமற்ற மூட நம்பிக்கைகள் கொண்ட செயல்களில் மக்களும் ஈடுபட்டுவிடக் கூடாது என சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.