சர்வதேச அளவிலான கொரோனா தொற்றின் பாதிப்பு பல ஆண்டுகளுக்கு நீடிக்கும் என உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குனர் டெட்ரோஸ் அதனோம் தெரிவித்துள்ளார்.
உலக சுகாதார நிறுவனம் நடத்திய அவசர கால கூட்டத்தில் கொரோனா தொற்றின் பாதிப்பு குறித்து பேசிய அவர் “இது தொற்றானது பல நூற்றாண்டுகளுக்கு ஒரு முறை ஏற்படும் நோய்தொற்று. இதனுடைய பாதிப்பு இன்னும் பத்தாண்டுகளுக்கு உணரப்படும்.” என்று டெட்டோர்ஸ் தெரிவித்துள்ளார்.
பல ஆராய்ச்சிகள் இந்த கொரோனா வைரஸை குறித்து நடந்து வந்தாலும் பல கேள்விகளுக்கு விடை தெரியாமல் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டதாக நினைத்த பல நாடுகள் தற்போது இரண்டாம்கட்ட கொரோனா தாக்குதலுக்கு ஆளாகியுள்ளதாகவும் வருத்தம் தெரிவித்துள்ளார்.
சீனாவின் வூஹான் நகரில் தொடங்கிய கொரோனா நோய்தொற்று இதுவரை உலக அளவில் 6 லட்சத்து 70 ஆயிரம் பேரின் உயிர்களை பலி கொண்டுள்ளது. 1 கோடிக்கும் அதிகமான நபர்கள் இந்த வைரஸ் தொற்றுக்கு ஆளாகியிருக்கிறார்கள்.
அமெரிக்கா, பிரேஸில், மெக்ஸிகோ மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அந்நாடுகளின் அரசுகள் சூழலை கையாள முடியாமல் திணறி வருகின்றன.
பொருளாதார நடவடிக்கைகளும் உலக அளவில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பல பிராந்தியங்களில் இரண்டாவது கொரோனா அலை ஏற்படும் என்ற அச்சத்தில் உள்ளன.