Corona Virus

''ஊரடங்கு காலத்தில் இப்படியும் ஓர் அரசுப் பள்ளி ஆசிரியை!'' - என்ன செய்தார் தெரியுமா?

கொரோனா ஊரடங்கினால் பள்ளிகள் மூடப்பட்டு உள்ளன. தனியார் பள்ளிகளில் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அரசுப்பள்ளி ஆசிரியை செய்த செயல் ஒன்று அனைவரிடமும் வரவேற்பு பெற்றுள்ளது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
பி.என்.எஸ்.பாண்டியன்
Updated on

திருவேற்காடு அடுத்த புளியம்பேடு பகுதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருபவர் எழிலரசி . பூந்தமல்லியை சேர்ந்த இவர், ஊரடங்கின் காரணமாக அரசு பள்ளிகள் மூடப்பட்டு உள்ள நிலையில் மாணவர்களின் நலன் கருதியும், வேலை பார்க்காமல் வீட்டில் இருந்தபடி சம்பளம் வாங்க விரும்பாலும்தான் பணிபுரியும் அரசு பள்ளியில் பயிலும் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களின் வீடுகளுக்குச் சென்று மாணவ, மாணவிகளை ஒருங்கிணைத்து அவர்களது வீட்டின் அருகே ஒரு இடத்தில் மாணவர்களை அமர வைத்து தினமும் 2 மணிநேரம் பாடம் நடத்தி வருகிறார்.

பள்ளியில் பாடம் எடுப்பது போல மாணவர்களை ஒரு மரத்தடியில் சமூக விலகலோடு, முககவசம் அணிய வைத்தும், கைகளை சுத்தம் செய்ய வைத்தும் பாடம் நடத்துகிறார். தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகிய 3 பாடப்பிரிவுகள் மட்டுமே எடுத்து விட்டு, அதில் இருந்து அவர்களுக்கு வீட்டுப்பாடமும் கொடுக்கிறார்.

இதுதொடர்பாக ஆசிரியை எழிலரசி கூறும்போது, இந்த மூன்று பாடப்பிரிவுகளை படித்தாலே ஓரளவு மாணவர்கள் தேறி விடலாம். ஊரடங்கால் 4 மாதங்களாக படிக்காமல் இருக்கும் மாணவர்கள் இனிவரும் நாட்களிலும் தொடர்ந்து பாடம் நடத்தாவிட்டால் படிக்கும் திறனை இழப்பார்கள். விடுபட்ட பாடங்களை படித்தால் அடுத்த வகுப்புக்கு செல்லும்போது எளிமையாக இருக்கும்.

கடந்த 3 மாதங்களுக்கு மேலாக வேலை செய்யாமல் சம்பளம் வாங்கியது என் மனதை உறுத்தியது. இதனால் மாணவர்களின் நலன் கருதி தற்போது ஆங்காங்கே மாணவர்களை ஒருங்கிணைத்து அவர்களது பெற்றோர் கொடுக்கும் இடத்தில் வைத்து மாணவர்களுக்கு பாடம் நடத்துகிறேன் என்று கூறினார்.

இதுமட்டுமல்லாமல் ஆசிரியை எழிலரசி மாணவர்களுக்கு பிஸ்கட், மிக்சர் போன்ற சிற்றுண்டிகளையும் மாணவர்களுக்கு அளித்து வருகிறார். இதன்காரணமாக மாணவர்கள் உற்சாகமாக படித்து வருகிறார்கள். வாரத்தில் 5 நாட்கள் வகுப்பு நடத்தும், அரசு பள்ளி ஆசிரியையின் இந்த செயலை பெற்றோர்களும், ஊர் மக்களும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories