கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதத்திலிருந்து இந்தியா முழுக்க ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து திரையரங்குகள், உடற்பயிற்சி கூடங்கள், மால்கள், பள்ளி மற்றும் கல்லூரிகள் உள்ளிட்டவை இயங்கவில்லை. ஆனால் தற்போது திரையரங்குகள் மற்றும் உடற்பயிற்சி கூடங்களை மட்டும் திறக்கலாமா என அரசு பரீசிலித்து வருகிறது.
அதே நேரத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் ஆன்லைன் வகுப்புகளோடே தொடரும் எனவும் கூறப்படுகிறது. திரையரங்குகள் கூட்டமைப்பு 25-30 சதவீத பார்வையாளர்களுடன் இயங்க அனுமதி வேண்டி அரசுக்குக் கோரிக்கை வைத்துள்ளதாகத் தெரிகிறது.
இந்த கோரிக்கை மத்திய உள்துறை அமைச்சகத்துக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் உடற்பயிற்சி கூடங்களும் பல கட்டுப்பாடுகளுடன் இயங்கத் தொடங்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
டெல்லி அரசு மெட்ரோ ரயில்களை இயக்க மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளது. ஆனால் அது சம்பந்தமாக எந்தவித முடிவும் இதுவரை எட்டப்படவில்லை. பல பண்டிகைகள் நெருங்கி வருவதால், தடைகளைத் தளர்த்துவது குறித்து மிகுந்த எச்சரிக்கையுடன் அரசு பரீசிலித்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.
கடந்த 24 மணிநேரத்தில் கிட்டத்தட்ட 50,000 கோவிட் -19 பாதிப்புகளை இந்தியா நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் இந்த முடிவு எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை இந்தியாவில் 14.35 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், 32,771 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.