கொரோனா வைரஸால் பாதிக்கப்படும் அனைவரும் பல்வேறு மன உளைச்சலுக்கும் உள்ளாகி வருகின்றனர். அது பெரும்பாலும் அரசு அதிகாரிகளின் செயல்பாடுகளாலேயே ஏற்படுகின்றனர்.
தொற்று பாதிப்பு உண்டானவர்களின் வீட்டின் முன்பு முறையான விழிப்புணர்வை ஏற்படுத்தாமல் பதாகைகளை வைப்பது, வீட்டில் ஒருவருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டிருந்த போதும் அவர்களுக்கான அத்தியாவசிய தேவைகளை ஏற்பாடு செய்துத் தராமல் வீட்டிலேயே அடைத்து வைப்பது போன்ற பல்வேறு குளறுபடிகளை அரசு ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
இதன் காரணமாக ஏராளமானோர் பல்வேறு மன சிதைவுக்கும் இன்னலுக்கும் ஆளாகி வருகின்றனர். அந்த வகையில் சென்னையில் உள்ள வளசரவாக்கம் மண்டலத்தின் ஆழ்வார்திருநகர் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் ஒரு குடும்பத்தில் இருப்பவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
இதனால் அந்த வீட்டின் வாயிலை தகரங்களால் சுற்றி வளைக்கப்பட்டு கொரோனா பாதித்த வீடு என போஸ்டரை ஒட்டிவிட்டு சென்றிருக்கிறார்கள் மாநகராட்சி ஊழியர்கள். வீட்டினும் 9 வயது சிறுமி உட்பட அனைவரும் பால், தண்ணீர் போன்று எந்த அத்தியாவசிய தேவைக்கும் வெளியே செல்ல முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது.
அவர்களுக்கு மாநகராட்சி தரப்பில் இருந்தும் எந்த உதவியும் செய்துத்தரவில்லை. இதனால் அந்த குடும்பத்தினர் பெரும் அதிருப்தி அடைந்ததோடு மன அழுத்தத்துக்கும் ஆளாகியுள்ளனர்.
இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வட்டமடித்து வருகிறது. மேலும் தற்போது முழு நாடும் கொரோனாவை காட்டிலும் இது போன்ற தகர ஷீட்டுகளோடும் அரசு அதிகாரிகளோடும்தான் போராட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்றும் விமர்சிக்கப்பட்டு வருகிறது.
இது போன்ற செயல்களுக்கு சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் என்ன பதில் கூறவிருக்கிறார்? பனிச்சுமை காரணமாக ஊழியர்கள் இவ்வாறு செய்துவிட்டனர் என பூசி மொழுகப் போகிறாரா அல்லது அவ்வாறு பனிச்சுமை ஏற்படாத வண்ணம் அவர்களுக்கான நெறிமுறைகளை கற்பித்து நோய் தாக்குதலுக்கு உள்ளானவர்களை எவ்வாறு கையாள வேண்டும், வீட்டில் தனிமைப்படுத்தப்படுவோருக்கு என்ன மாதிரியான உதவிகளை வழங்க வேண்டும் என்று 4 மாதங்களுக்கு பிறகு பாடம் எடுக்கப் போகிறாரா என கேள்விகளும் எழுப்பப்பட்டுள்ளன.
முன்னதாக, இதேப்போன்ற நிகழ்வு கர்நாடகா மாநிலத்தின் பெங்களூருவிலும் நடந்துள்ளது. அங்கு மக்களின் கடும் எதிர்ப்பை அடுத்து பெங்களூரு மாநகராட்சி ஆணையரே மன்னிப்புக் கோரி உடனடியாக நடவடிக்கை எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.