இந்தி திரையுலகின் முன்னணி நட்சத்திரமான அமிதாப் பச்சனுக்கு கோவிட் 19 நோய் உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.
இந்நிலையில் மருத்துவமனையின் தனிமை அறையில் இருக்கும் கோவிட் 19 நோயாளியின் மனநிலையும், பல நாட்களாகத் தனிமைப் படுத்தப்பட்டிருப்பதால் இன்னொரு மனித முகத்தைப் பார்க்காமல் இருப்பது என்ன மாதிரியான உணர்வுகளை ஏற்படுத்துகிறது என்பதையும் தன்னுடைய வலைத்தளத்தில் அமிதாப் எழுதியுள்ளார்.
“இரவின் இருளிலும், குளிர்ந்த அறை ஏற்படுத்தும் நடுக்கத்திலும், நான் பாடுகிறேன்...தூங்க முயன்று என் கண்கள் மூடிக்கிடக்கின்றன.. என்னைச் சுற்றி யாரும் இல்லை...” என அவர் எழுதியுள்ளார்.
மேலும், கோவிட் 19 நோயாளியின் மனநிலை பற்றி அதிகம் வெளியில் தெரியவில்லை என்றும், பல வாரங்களாக இன்னொரு மனிதனைக் காணாமல் மருத்துவமனையில் தனிமையில் இருக்கும் அந்த நிலை எதார்த்தத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனக்குச் சிகிச்சை அளிக்க வரும் மருத்துவர்கள், செவிலியர்கள் என அனைவரும் முழுதாக மூடப்பட்ட பாதுகாப்பு உடையில் வருவதால் யார் முகத்தையும் அவரால் பார்க்கவும், உணரவும் முடியவில்லை எனவும் அவர்களுக்கு என்ன செய்யப் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறதோ அதைச் செய்தவுடன் அவர்கள் கிளம்பிவிடுவார்கள் எனவும், அதிக நேரம் இருந்தால் தொற்று ஏற்படும் என்ற அச்சம்தான் அதற்குக் காரணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூலை 11-ம் தேதி அமிதாப் பச்சன் மற்றும் அவரது மகன் அபிஷேக் பச்சன் இருவருக்கும் கோவிட் 19 நோய் இருப்பது உறுதியானது. அதன் பின்னர் அவரது மருமகள் ஐஸ்வர்யா பச்சனுக்கும், அவரது 8 வயது பெயர்த்திக்கும் கோவிட் 19 நோய் உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.