மழை, குளிர்காலங்களில் கொரோனா வைரஸ் பரவும் வேகம் அதிகரிக்கும் என, ஐ.ஐ.டி மற்றும் எய்ம்ஸ் மருத்துவமனை நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
நாட்டில் கொரோனா வைரஸ் பரவும் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் இதுவரை பாதிப்பு 11 லட்சத்து 18 ஆயிரத்து 43 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா காரணமாக 27 ஆயிரத்து 497 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஜூன், ஜூலை மாதங்களில்தான் கொரோனா வைரஸ் தொற்று வெகுவேகமாக அதிகரித்து வருகிறது. இந்தச் சூழலில் புவனேஷ்வரில் உள்ள ஐ.ஐ.டி கல்வி நிறுவனமும் எய்ம்ஸ் மருத்துவமனையும் சேர்ந்து ஆய்வு நடத்தியுள்ளன.
அந்த ஆய்வு அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது :
“2003-ல் பரவிய சார்ஸ் வைரஸ், 2009-ல் பரவிய AH1N1 இன்ப்ளூயன்ஸா வைரஸ், தற்போது பரவிவரும் கொரோனா வைரஸ் போன்றவை காலநிலைக்கு ஏற்பவும், சுற்றுச்சூழலுக்கு ஏற்பவும் பரவும் வேகத்தில் மாற்றத்தைச் சந்திப்பவையாகும். இது சார்ஸ், இன்ப்ளூயன்ஸா வைரஸில் கண்டறியப்பட்டுள்ளது.
இந்தியாவில் பரவிவரும் கொரோனா வைரஸ் வெயில் காலத்தில் எவ்வாறு இருந்தது, மழைக்காலம், குளிர்காலம் ஆகியவற்றில் பரவும் வேகம் ஆகியவை குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. இதற்காக ஏப்ரல், ஜூன் மாதங்களில் கொரோனாவில் பாதிக்கப்பட்ட எண்ணிக்கை குறித்த புள்ளிவிவரங்கள் சேகரிக்கப்பட்டன.
அந்த வகையில் காலநிலைமாற்றம் கொரோனா வைரஸ் பரவும் வேகத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். வெயில் அதிகரித்தால் கொரோனா வைரஸ் பரவும் வேகம் குறைய வாய்ப்பு இருக்கிறது. மழைக்காலம் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவுவதற்கு சாதகமான சூழலாகும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
வெயிலில் ஒரு டிகிரி செல்சியஸ் அதிகரித்தால்தால் கூட 0.99 சதவீதம் கொரோனா பரவும் வேகம் குறையும். அதேசமயம், மழைக்காலம், மற்றும் குளிர்காலத்தில் கொரோனா வைரஸ் பரவும் வேகம் வெயில் காலத்தில் இருந்ததைவிட வேகமாக இருக்கும். ஆனால், அதன் பரவல் வேகத்தின் அளவு வரும் காலங்களில் தொடர்ச்சியான ஆய்வுகள் மூலம் தெரியவரும்.” இவ்வாறு அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.