பட்டுக்கோட்டை பண்ணவயலை சேர்ந்த சாமியப்பா சவுண்ட் சர்வீஸ் உரிமையாளரும் தஞ்சை மாவட்ட பா.ஜ.க தலைவருமான பண்ணவயல் இளங்கோவின் உறவினரான கருணாநிதி என்பவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து, தஞ்சையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன் தினம் மதியம் சிகிச்சை பலனின்றி கருணாநிதி உயிரிழந்தார்.
கொரோனாவால் உயிரிழந்தார் என்றதும் அவரது சொந்த பந்தங்கள், RSS, இந்து மக்கள் கட்சி, பாஜக, அனுமன் சேனா, இந்து முன்னனி, சேவா பாரதி, விவேகானந்த பவுண்டேஷன், பஜ்ரங்தள் இன்னபிற இந்து அமைப்புகள் என எவரும் இறுதிச்சடங்குகள் செய்ய முன்வரவில்லை.
இச்செய்தியை மருத்துவமனையின் நிர்வாகமும் குடும்பத்தினரும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் தஞ்சை I.M. பாதுஷாவிடம் எடுத்துக் கூறியதோடு அவருடைய இறுதி சடங்கை நடத்தி கொடுக்குமாறு அவருடைய சொந்த ஊராக இருக்கக்கூடிய பட்டுக்கோட்டை அடுத்து இருக்கும் பண்ணவயலில் நல்லடக்கம் செய்து தருமாறு வேண்டுகோள் விடுத்தனர்.
அதன் அடிப்படையில் தஞ்சை I.M. பாதுஷா தலைமையில் தஞ்சை மாநகர நிர்வாகிகளான சதாம் உசேன், முகமது ரசூல், அப்துல் கரீம், மன்சூர் அலி, இத்ரிஸ், ரபீக் மற்றும் ஷானவாஸ் ஆகியோர் த.மு.மு.கவின் தஞ்சை மாநகர ஆம்புலன்ஸை எடுத்துக் கொண்டு மருத்துவமனைக்கு விரைந்து சென்றனர்.
இறந்த கருணாநிதியின் உடலை முறையாக பேக் செய்து த.மு.மு.கவின் அவசர கால ஊர்தி மூலமாக அவருடைய சொந்த ஊரான பண்ணவயலுக்கு எடுத்துச் செல்ல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில் மாநில அமைப்புச் செயலாளர் தஞ்சை I.M. பாதுஷா தமுமுக மாநில இளைஞரணி துணைச் செயலாளர் பவாஸ்கான் மற்றும் மாவட்ட தலைவர் முஹம்மது ஷேக் ராவுத்தர் அவர்களிடத்தில் சம்பவத்தை அலைபேசியில் எடுத்துரைத்து மதுக்கூர் நிர்வாகிகளும் இணைந்து இந்த இறுதி சடங்கை செய்து தருமாறு வேண்டுகோள் விடுத்தார்.
அதனடிப்படையில் பவாஸ்கான், முகம்மது ஷேக் ராவுத்தர் தலைமையில் தமுமுக - மமக மதுக்கூர் பேரூர் கழக நிர்வாகிகளான ராசிக் அஹமது, தாஜ்தீன், முஜிபுர் ரஹ்மான், இஜாஸ் அஹமத், இம்ரான், மற்றும் பாசித் பண்ணைவயல் நோக்கி விரைந்து கருணாநிதியை நல்லடக்கத்தை செய்வதற்காக காத்திருந்தனர்.
கருணாநிதியினுடைய உடலை ஆம்புலன்ஸ் மூலமாக தஞ்சையிலிருந்து பண்ணவயல் கொண்டு வந்த தமுமுக நிர்வாகிள் முகம்மது ரசூல், இத்ரிஸ் மேற்கண்ட மதுக்கூர் நிர்வாகிகளுடன் இணைந்து உடலை நல்லடக்கம் செய்து கொடுத்தனர். இந்நிகழ்வை கண்ட அந்த ஊர் மக்கள் வெகுவாக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினுடைய சேவைகளையும், பணிகளையைப் பாராட்டி மனிதநேயத்தோடு செய்து கொண்டிருக்கக் கூடிய இப்பணிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்தியாவில் கொரோனா பரவல் தொடங்கிய நேரத்தில் தப்லிகி ஜமாத் மாநாட்டினாலேயே அதிக பாதிப்புகள் ஏற்பட்டது என பழித்து பேசிய இதே சங்கிகளாக பாஜக போன்ற இந்துத்வ அமைப்புகள் அவர்களின் சொந்த கட்சியைச் சேர்ந்தவரின் உறவினருக்கு உதவு முன்வராமல் ஓடி ஒளிந்துக் கொண்டுள்ளது. இதுதான் இந்துத்வ கும்பலின் உண்மை முகம் என்பதற்கு கருணாநிதி இறப்பே சாட்சியாக அமைந்துள்ளது.