கொரோனா தொற்று உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை கொரோனா தொற்றால் உலகம் முழுவதும் ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதோடு 5 லட்சத்திற்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர்.
கொரோனா தொற்று குறித்தும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும் உலக சுகாதார நிறுவனம் (WHO) தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. கொரோனா வைரஸ், இருமல், தும்மல் மூலமாகவும் உமிழ்நீர் துளிகள் மூலமாகவும் பரவும் எனக் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து, மக்கள் முகக்கவசம் மற்றும் கையுறை போன்றவற்றை அணிய அறுவுறுத்தப்பட்டுள்ளனர்.
இப்போது, காற்றில் கொரோனா வைரஸ் பரவும். கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் தும்மும்போது அல்லது இருமும்போது அவரது எச்சிலின் சிறிய நுண்துகள்கள் காற்றில் பரவி இருந்தால், அதை மற்றொருவர் சுவாசித்தால் அவரும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது எனக் கண்டறியப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் காற்றில் பரவும் என்று என்று 32 நாடுகளைச் சேர்ந்த 239 அறிவியல் வல்லுநர்கள், ஆய்வாளர்கள் உலக சுகாதார அமைப்புக்கு தெரியப்படுத்திய ஆதாரங்களை ஏற்பதாக உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது.
ஜெனிவாவில் உலக சுகாதார அமைப்பின் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கொரோனா வைரஸ் தடுப்பு தொழில்நுட்பப் பிரிவின் தலைவர் மருத்துவர் மரியா வான் கெர்கோவ் ஊடகங்களுக்குப் பேட்டி அளித்தார்.
அப்போது, “கொரோனா வைரஸ் மனிதர்கள் மூலம் மனிதர்களுக்கு ஒருவர் தும்மும்போதும், இருமும்போதும் வெளிப்படும் நீர்த்துளிகள் மூலம் பரவும் என்று கூறியிருந்தோம். ஆனால், ஆய்வாளர்கள் காற்றின் மூலம் கொரோனா வைரஸ் பரவும் சாத்தியம் இருக்கிறது என்று ஆய்வறிக்கையை அளித்தனர். காற்றின் மூலம் கொரோனா பரவுவதற்கான ஆதாரங்கள் இருப்பதை உலக சுகாதார அமைப்பு ஏற்கிறது'” என்று தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், காற்றின் மூலமும் கொரோனா தொற்று பரவும் எனும் செய்தி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.