நாட்டில் கொரோனா தொற்று பரவல் தொடங்கியபோது, முகக்கவசம், கிருமிநாசினி ஆகியவற்றை அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் சேர்த்து கடந்த மார்ச் 13ம் தேதி மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது.
இவ்வகை பொருட்களை பதுக்குவதோ, அதிக விலைக்கு விற்பதோ சட்டப்படி குற்றம் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கடந்த 100 நாட்களில் 7 லட்சத்தை எட்டியுள்ளது.
இப்படி இருக்கையில், மத்திய நுகர்வோர் விவகாரத்துறையின் செயலாளர் அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தின் கீழ் இருந்த முகக்கவசம், கிருமி நாசினியை நீக்குவதாக தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவலை தடுப்பதற்கு முகக்கவசங்கள் அணிவதே சாலச்சிறந்தது என உலக சுகாதார அமைப்பு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அவ்வாறு இருக்கையில், இந்தியாவில் அத்தியாவசிய பொருட்களில் இருந்து முகக்கவசத்தை நீக்கியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
100 நாட்கள் கடந்துவிட்டது என்றாலும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் 7 லட்சத்தை கடந்துள்ளது மத்திய அரசுக்கு தெரியவில்லையா? முகக்கவசங்களின் விலை உயர்ந்தால் வாழ்வாதாரமின்றி கிடக்கும் சாமானிய மக்களால் எவ்வாறு அதனை வாங்க முடியும் என யோசிக்கவில்லையா? என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.