தமிழகத்தில் புதிதாக 33 ஆயிரத்து 518 பேருக்கு நடத்தப்பட்ட சோதனையில் 3 ஆயிரத்து 827 பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது என சுகாதாரத்துறை இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், தமிழகத்திலேயே இருந்த 3,783 பேர் மற்றும் வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து வந்த 44 பேர் என 3,827 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு இறுப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதையடுத்து மாநிலத்தில் மொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 978 ஆக அதிகரித்துள்ளது. அதில், 70 ஆயிரத்து 370 ஆண்களுக்கும், 44 ஆயிரத்து 586 பெண்களுக்கும், 22 திருநங்கைகளுக்கும் தொற்று இருப்பது இதுகாறும் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிகையை போன்று அதனால் பாதிக்கப்பட்டு உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது., அதன்படி கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் 61 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். அதில் 8 பேருக்கு எவ்வித துணை நோய் பாதிப்பும் இல்லாமலேயே உயிரிழந்திருக்கிறார்கள்.
மேலும், அதிகபட்சமாக சென்னையில் 30, செங்கல்பட்டில் 8, மதுரையில் 7 பேர் என உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது. மொத்தமாக இதுவரையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,571 ஆக அதிகரித்துள்ளது.
அதேபோல, தினந்தோறும் டிஸ்சார்ஜ் செய்யப்படுவோரின் எண்ணிக்கையும் உயர்விலேயே உள்ளது. அதன்படி இன்று 3,793 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதை அடுத்து இதுவரையில் 66 ஆயிரத்து 571 பேர் வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
ஆனால் அவர்கள் அனைவரும் பூரண குணமடைந்தவர்கள் என்ற விவரம் இல்லை. இதையடுத்து, மருத்துவமனைகள் மற்றும் வீட்டுக் கண்காணிப்பில் இருப்போரின் எண்ணிக்கை 46 ஆயிரத்து 833 ஆக உள்ளது.
மேலும், 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள், சிறார்கள் 5 ஆயிரத்து 668 பேருக்கு கொரோனா தொற்று இதுவரையில் ஏற்பட்டுள்ளது. 60 வயதுக்கு மேலானோர் 13 ஆயிரத்து 920ம், 13 முதல் 60 வயது வரையில் உள்ள 95 ஆயிரத்து 390 பேருக்கும் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.