Corona Virus

“காலத்தை வீணாக்காதீர்; கிராமங்களைத் தயார்ப்படுத்தாவிடில் பேராபத்து ஏற்படும்” - மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!

கிராமங்களில் கொரோனா அலை தொடங்கியும் சமூகப்பரவல் இல்லை என்று அ.தி.மு.க 'விஞ்ஞானிகள்' காலத்தை வீணடிக்கின்றனர். கிராமங்களைத் தயார்ப்படுத்தாவிடில் பேராபத்து ஆகிவிடும் என தி.மு.க தலைவர் எச்சரித்துள்ளார்.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. தலைநகர் சென்னையில் மிகவேகமாகப் பரவி வரும் கொரோனா, பிற மாவட்டங்களிலும் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது.

கடந்த சில வாரங்களாக மதுரை, கோவை உள்ளிட்ட பகுதிகளிலும் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகிறது. சென்னை தவிர பிற தமிழக மாவட்டங்களில் ஜூன் 1-ம் தேதியன்று கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் 7,725 பேர். ஆனால் ஜூலை 2-ம் தேதி இந்த எண்ணிக்கை, 25 ஆயிரத்து 794 ஆக அதிகரித்துவிட்டது.

மருத்துவ வசதிகள் சரிவரக் கிடைக்காத கிராமங்களிலும் கொரோனா தொற்று தீவிரமடைந்தால் நிலைமை சிக்கலாகும் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரித்திருந்தார்.

தி.மு.க சார்பில், மாவட்ட வாரியாக கொரோனா பரிசோதனை மையங்கள் மற்றும் மருத்துவமனைகளின் எண்ணிக்கை, பாதிக்கப்பட்டோரின் மருத்துவமனை வாரியான எண்ணிக்கை, கொரோனா நோய்ப் பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை, இறந்தோரின் எண்ணிக்கை, பெரும் பாதிப்பிற்குள்ளான நகரங்களில் இருந்து மாவட்டங்களுக்குச் சென்றோரின் எண்ணிக்கை, மருத்துவமனை வாரியாக கொரோனா நோய்த் தொற்றாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள விவரம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கழக மாவட்டச் செயலாளர்கள் கேட்டார்கள்.

அதற்கு இதுவரை எந்த பதிலும் இல்லாத சூழலில் நேற்று மீண்டும் கழக மாவட்டச் செயலாளர்களை கொரோனா நோய் குறித்து '32 தகவல்கள்' கோரி மாவட்ட ஆட்சித் தலைவர்களிடம் மனுக்களைக் கொடுக்குமாறு அறிவுறுத்தினார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.

அதன்படி, கொரோனா பரவலின் மாவட்ட வாரியான 32 தகவல்களைக் கோரி அந்தந்த மாவட்ட ஆட்சியர்களிடம் தி.மு.கழக மாவட்ட செயலாளர்கள் மனு அளித்துள்ளனர்.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், “கிராமங்களில் கொரோனா அலை தொடங்கியும் சமூகப்பரவல் இல்லை என்று அ.தி.மு.க 'விஞ்ஞானிகள்' காலத்தை வீணடிக்கின்றனர். கிராமங்களைத் தயார்ப்படுத்தாவிடில் பேராபத்து ஆகிவிடும் என எச்சரிக்கிறேன்!” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories