இந்தியாவில் கடந்த ஐந்தே நாட்களில் ஒரு லட்சம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்றும், ஜூன் மாதத்தில் மட்டுமே 4 லட்சம் கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளது என்றும் தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது.
கொரோனா பரவல் காரணமாக இந்தியாவில் கடந்த மார்ச் 25ம் தேதி தேசிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டு அது 4 கட்டங்களாக நீட்டிக்கப்பட்டது. மற்ற நாடுகளில் ஊரடங்கின் மூலம் கொரோனா சோதனைகளை அதிகரித்து தொற்று பரவலை வெகுவாக குறைத்தது. ஆனால் இந்தியாவில் மட்டுமே ஊரடங்கு அமல்படுத்தப்பட்டும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்த வண்ணமே உள்ளது என எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்திருந்தனர்.
மார்ச் 25ம் தேதி வெறும் 606 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று ஊரடங்கு தொடங்கி இன்றோடு 100 நாட்கள் ஆகியுள்ள நிலையில் இன்று 6 லட்சத்து 4 ஆயிரத்து 641 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அது மட்டுமல்லாமல், ஜூன் 3ம் தேதி இரண்டு லட்சமாக இருந்த கொரோனா பாதிப்பு அடுத்த 10 நாட்களில் அதாவது ஜூன் 13ம் தேதி மூன்று லட்சமாக உயர்ந்தது. அதற்கடுத்தபடியாக ஜூன் 21ம் தேதி நான்கு லட்சத்தை எட்டிய கொரோனா பாதிப்பு மேலும் 6 நாட்களாக குறைந்து ஜூன் 27ம் தேதி 5 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.
தற்போது கடந்த ஐந்தே நாட்களில் ஒரு லட்சம் பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஜூன் மாதத்தில் மட்டுமே 4 லட்சம் பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியிருக்கிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டுமே 19 ஆயிரத்து 148 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 434 பேர் உயிரிழந்தும், 11 ஆயிரத்து 882 பேர் குணமடைந்தும் உள்ளதாக தெரியவந்துள்ளது.
இவ்வாறு கொரோனா பரவல் இரட்டிப்பாகும் காலம் குறைந்துக்கொண்டே வருவதால் ஜூலை மாதத்துக்குள் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட நேரலாம் என மருத்துவர்கள், ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆனால் மத்திய மோடி அரசோ தொடர்ந்து இறப்பு விகிதம் குறைவு, பாதிப்புகள் குறைவாகவே உள்ளது, சர்வதேச நாடுகள் இந்தியாவின் கொரோனா தடுப்பு நடவடிக்கையை பாராட்டுகின்றன என்றெல்லாம் தேர்தல் பிரசாரங்களில் பொய்யுரைப்பது போல பேசி வருகின்றன.
கள நிலவரங்களை ஆராய்ந்து, எதிர்க்கட்சிகள், நிபுணர்கள் என பல தரப்பிடமும் உரிய ஆலோசனையை நடத்தி சீரிய நடவடிக்கையை மோடி அரசு எடுக்க வேண்டும் என கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன.