உலகையே அசைத்து பார்த்து வரும் கொரோனா வைரஸின் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட இந்தியா முதல் 5 பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது.
நேற்று வரையில் 5 லட்சத்து 85 ஆயிரத்து 792 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. இதில் 17 ஆயிரத்து 410 பேர் உயிரிழந்தும், 3 லட்சத்து 47 ஆயிரத்து 836 குணமடைந்தும் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் 17 ஆயிரத்து 876 பேர் பாதிக்கப்பட்டும், 12 ஆயிரத்து 568 பேரும் குணமடைந்துள்ள போது, ஒரே நாளில் 506 பேர் உயிரிழந்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மே மாத இறுதியிலும், ஜூன் தொடக்கத்திலும் நாளொன்றுக்கு 300க்கும் கீழ் இருந்த உயிரிழப்போரின் எண்ணிக்கை தற்போது 400, 500 என அதிகரித்துள்ளது. இருப்பினும் மத்திய மோடி அரசோ இந்தியாவில் இறப்பு எண்ணிக்கை குறைவாகவே உள்ளது என தொடர்ந்து கூறி வருகிறது.
விகிதாச்சாரப்படி குறைவாக இருந்தாலும் எண்ணிக்கையின் படி 17,410 என்பது அதிகம் என்பதை மத்திய அரசு இதுவரை உணராதது ஏன்? உலகளவில் 4வது இடத்தில் இந்தியா இருந்து வருகிறது என்பதை மோடி அரசு இன்னமும் உணரவில்லையா?
மேலும், கொரோனாவால் நாளொன்று ஆயிரக்கணக்கில் பாதிக்கப்படும் வேளையில் சமூக பரவல் ஏற்படவில்லை எனக் கூறி மக்களை அலட்சிய மனப்பான்மைக்கு அரசு இட்டுச்செல்வது ஏன்? என கேள்விகள் எழுப்பப்படுகிறது.
இப்படியான இக்கட்டான சூழலில் இரண்டாம்கட்ட ஊரடங்கு தளர்வை முன்னெடுத்துச் செல்ல மத்திய அரசு மாநில அரசுகளை பணித்திருப்பது மக்கள் உயிரின் மீதான கவலையின்மையை துல்லியமாக காட்டுகிறது என்றும் குற்றஞ்சாட்டப்பட்டு வருகிறது.