Corona Virus

“ஒப்புக்கு ஆன்லைன் சேவை: முதல்வர் பேட்டியில் ஒன்று, செயலில் வேறொன்று”-சுகாதாரத்துறையால் கர்ப்பிணி வேதனை!

தமிழக அரசின் ஆன்லைன் சேவையை நம்பி PICME (Pregnancy and Infant Cohort Monitoring and Evaluation) பதிவிட முடியாமல் சென்னையில் கர்ப்பிணி பெண்ணை சுகாதாரத்துறை பணியாளர்கள் அலைக்கழித்துள்ளனர்.

“ஒப்புக்கு ஆன்லைன் சேவை: முதல்வர் பேட்டியில் ஒன்று, செயலில் வேறொன்று”-சுகாதாரத்துறையால் கர்ப்பிணி  வேதனை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து வருவோரைப் போன்று பிற நோய்களால் பாதிக்கப்பட்டு உரிய சிகிச்சை கிடைக்காமலே உயிரிழக்கும் சம்பவங்களும் இந்த ஊரடங்கு நேரத்தில் தொடர்ந்து நிகழந்து வருகிறது.

அரசு மருத்துவமனைகள் உள்பட பெரும்பாலான மருத்துவமனைகளும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கே முன்னிலை கொடுத்து வருவதால் கர்ப்பிணிகள், இதய நோய், டயாலிசிஸ் போன்ற பிற சிகிச்சைகள் தரப்படுவதில் தாமதமும், சில மருத்துவமனைகளில் மறுப்பும் தெரிவிக்கப்பட்டு வருவதால் நோயாளிகள் கடுமையான இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

தமிழக அரசின் அறிவிப்பாணைகள் எல்லாம் கேட்டறிவதற்கு நன்றாக இருந்தாலும் நடைமுறையில் அவை எதுவுமே சாத்தியப்படாதவாறு இருப்பதால் பெரும் சிக்கல்களும், உயிரிழப்புகளுமே நேர்கிறது. இதனை அரசு தரப்பும் கண்டும் காணாமல் இருப்பது வேதனையாக உள்ளது.

இந்நிலையில், தமிழகத்திலேயே கொரோனா தொற்று பாதிப்பு அதிகமுள்ள சென்னையில் கர்ப்பிணிப் பெண் அலைக்கழிக்கப்பட்டிருப்பது மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

“ஒப்புக்கு ஆன்லைன் சேவை: முதல்வர் பேட்டியில் ஒன்று, செயலில் வேறொன்று”-சுகாதாரத்துறையால் கர்ப்பிணி  வேதனை!

இது தொடர்பாக ஒரு கர்ப்பிணிப் பெண் தமிழக முதலமைச்சருக்கும், சுகாதாரத்துறை அமைச்சருக்கும் தனது ஃபேஸ்புக் பதிவின் மூலம் வலியுறுத்தியுள்ளதன் விவரம் பின்வருமாறு :

“தமிழக முதலமைச்சர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சருக்கு,

ஆன்லைனில் PICME (Pregnancy and Infant Cohort Monitoring and Evaluation) எண்ணை வாங்க கடந்த ஞாயிறு இரவு கடும் முயற்சி செய்தேன்.

Zone 15 சோழிங்கநல்லூர் என தேர்வு செய்த பிறகு, village என கேட்கிறது. எந்தெந்த ஏரியா எந்தெந்த கிராமத்தைச் சேரும் என்கிற விளக்கம் எங்குமே கொடுக்கப்படவில்லை. உடனே, 102க்கு அழைத்தேன்.

சில நிமிட காத்திருப்புக்கு பின்னர், "பக்கத்திலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு தங்களுடைய கணவரை ஆதார் கார்டும் அட்ரஸ் ப்ரூஃபும் தந்து அனுப்புங்கள். தாங்கள் செல்ல வேண்டாம். எண்ணைப் பதிவு செய்து தந்துவிடுவார்கள்" என்று ஒருவர் கூறினார்.

எனில், ஆன்லைன் என்பது பேருக்கு தான் வைத்திருக்கின்றனர் போல என நினைத்துக் கொண்டு, அடுத்த நாள் கணவரை அனுப்பினேன். அவரை வாசலிலேயே நிறுத்தி 102ல் சொன்னதை ஒரு செவிலியர் சொல்லி, நாளை உங்கள் மனைவியையும் அழைச்சுட்டு வாங்க எனக் கூறியுள்ளார்.

செவ்வாய்க்கிழமை நானும் கணவருடன் சோழிங்கநல்லூர் UPHC க்கு சென்றேன். எல்லா அரசு அலுவலகங்களைப் போல ஒரு செவிலியர் அரட்டை அடித்துக் கொண்டு மற்ற ஒரு செவிலியருக்கு ஆணை பிறப்பித்துக் கொண்டிருந்தார்.

"ஆதார் கொடுங்க.. " என்றதும் கணவர் ஆதாரை நீட்டுகிறார். "ஜெராக்ஸ் கொடுங்க!" என்றார்.

ஜெராக்ஸைத் தந்தோம். உடனே, "ஃபோட்டோ கொடுங்க!" என்றார்.

"நேற்று வந்தோமே.. போட்டோ பத்தி ஒண்ணுமே சொல்லலியே.." என்றால் ஒருவரிடமும் பதில் இல்லை.

அந்த அரட்டைச் செவிலியர் "நாளை செக்கப்புக்கு வரச் சொல்லுங்க.. அப்ப பதியுறோம்" என்று அதிகாரமாய் சொன்னதும், "நாளைக்கு இந்த ஜெராக்ஸ் பின்னாடி பேரு, அட்ரஸு, வயசு, எல்.எம்.பி.இ.டி (கவனிக்க.. இந்த வார்த்தை சரியாகக் கூட காதில் விழவில்லை.. அனைத்தும் அவ்வளவு வேகமாக கூறுகிறார்.. எனக்கு எல்.எம் மட்டுமே கேட்டது) , பாஸ்புக் ஜெராக்ஸ் கொண்டு வந்து, இவங்களையும் செக்கப்புக்கு அழைச்சுட்டு வாங்க" என கூறினார்.

என்னுடைய சந்தேகம் என்னவென்றால் கர்ப்பிணிப் பெண்களைத் தேவையில்லாமல் இந்த தொற்றுக் காலத்தில் வெளியில் செல்லக் கூடாது என கட்டளையிடுகிறது அரசு. ஆனால், இந்த மாதிரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வேலை செய்பவர்கள் ஒழுங்காக என்னென்ன வேண்டும் என்று சொல்லாமல் ஒரு கர்ப்பிணியை அலைய வைப்பது, அதுவும் என்னுடைய அப்பார்ட்மெண்ட்டில் இருவருக்கு கொரோனா உறுதியான இந்தச் சூழ்நிலையில் வரச் சொல்வது சரியா?!

தற்போதுள்ள சூழ்நிலையைப் பொருத்து கர்ப்பிணிப் பெண்களை அலையவிட வேண்டாம் என உடனடியாக இந்த செவிலியர்களுக்கெல்லாம் ஆணை பிறப்பிக்காவிடில், பல கர்ப்பிணிப் பெண்கள் பிரசவ வலியில் போராடுவதை விட கொரோனாவால் போராட வேண்டிய நிலை வந்துவிடும்.

தயவு செய்து ஆன்லைனில் PICME எண்ணை துரிதமாக வாங்க, இந்த நோய்த்தொற்று காலத்தில் ஆவன செய்யுங்கள்.

நன்றி

இப்படிக்கு,

தமிழ்நாட்டில் கொரோனா சமயத்தில், அதுவும் சென்னையில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு கர்ப்பிணிப் பெண்.”

இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் பதிவை அடுத்து, பலரும் தனக்கு நிகழ்ந்த அனுபவத்தை பின்னூட்டங்களில் தெரிவித்து வருகின்றனர். தனது தலைமையிலான தமிழக அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கையில் சிறப்பாக செயல்படுகிறது என பேட்டியில் மட்டுமே கூறிவிட்டு செயலில் அதனை முதலமைச்சர் கடைப்பிடிக்கத் தவறிவிட்டாரா எனவும் கேள்விகள் எழுந்துள்ளன.

banner

Related Stories

Related Stories