சென்னையில் கொரோனாவால் தினந்தோறும் 1500க்கும் மேலானோர் பாதிக்கப்பட்டு வருவதால் தளர்வுகளுடன் நடைமுறையில் இருந்த ஊரடங்கைக் கைவிட்டு, மீண்டும் பொது முடக்கத்தை அமல்படுத்தியுள்ளது தமிழக அரசு.
இதன் காரணமாக காய்கறி, பழங்கள் வாங்கவும், மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்காகவே மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டும் என்றும், பொதுவெளியில் கூட்டம் சேருவது, இரு சக்கர வாகனங்களில் அநாவசியமாக சுற்றித்திரிவது போன்ற செயல்களில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
இந்த பொது முடக்கம் ஜூன் 30ம் தேதி வரையில் அமலில் இருக்கும் என்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் எந்தக் கடைகளும் திறக்க அனுமதி இல்லை என்றும் அரசு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தனை கடுமையான அறிவிப்புகள் வெளியிட்ட பின்னும் தேவையின்றி மக்கள் பொதுவெளியில் திரிவது நின்றபாடில்லை.
அதன்படி இன்று ஒரே நாளில் மட்டுமே சென்னையில் 100 இருசக்கர வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். கடந்த ஏழே நாட்களில் 33 ஆயிரத்து 201 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டும், மாஸ்க் அணியாமல், சமூக இடைவெளி கடைபிடிக்காமல் இருந்ததற்காக 16 ஆயிரத்து 192 பேர் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளதாக மாநகர காவல்துறை ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சென்னை திருவான்மியூர் பகுதியில் ஊரடங்கு உத்தரவை மீறி காரில் சுற்றித் திரிந்த இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ராபின் சிங் மீது போக்குவரத்து போலிஸார் வழக்குப்பதிவு செய்ததோடு, அவரது காரையும் பறிமுதல் செய்துள்ளனர். ராபின் சிங் தற்போது ‘மும்பை இந்தியன்ஸ்’ கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக உள்ளார்.
இதேபோன்று, சென்னை தியாகராய நகரில் உள்ள பாண்டி பஜார் சாலையில் இன்று காலை 7.30 மணியளவில் 66 வயதுடைய முதியவர் ஒருவர் நடைபயிற்சி செய்துகொண்டிருந்தபோது அவரை மடக்கிப்பிடித்த மாநகராட்சி அதிகாரிகள், ஊரடங்கு உத்தரவை மீறியதாக அவரிடம் ரூ.100 அபராதம் வசூலித்து இந்தச் சூழலில் பொது வெளிக்கு வரக்கூடாது என அறிவுறுத்தி அனுப்பியுள்ளனர்.