இந்தியாவில் கொரோனா வைரஸால் கடந்த 24 மணிநேரத்தில் மட்டுமே 15 ஆயிரத்து 968 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று மட்டுமே 465 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்திருப்பதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதுவரை., 4,56,183 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆயிரத்து 476 ஆக உயர்ந்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2,58,684 குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருந்தாலும், சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1,83,022 ஆக உள்ளது.
இந்நிலையில், கொரோனா அறிகுறிகள் உள்ள அனைவருக்கும் சோதனை நடத்த வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு ஐ.சி.எம்.ஆர் ஆலோசனை வழங்கியுள்ளது. ஐ.சி.எம்.ஆர் புதிதாக வெளியிட்ட ஆலோசனை அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளது.
அதேபோல் ஒருவருக்கு யாரிடமிருந்து வைரஸ் தொற்று ஏற்பட்டது என்பதையும் தீவிரமாகக் கண்டறிந்து மேலும் பரவாமல் தடுக்க வேண்டும். அனைத்து அரசு, தனியார் மருத்துவமனை ஊழியர்களுக்கும், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளிலும் ரேப்பிட் கிட் சோதனைகளை நடத்த வேண்டும்.
சமூக பரவல் சோதனைகளையும் தொடர்ந்து நடத்த வேண்டும் என்று அனைத்து மாநில அரசுகளையும் ஐ.சி.எம்.ஆர் அறிவுறுதியுள்ளது.
மேலும், கொரோனா சோதனை தற்போது நாளொன்றுக்கு இரண்டு லட்சத்தை தாண்டியுள்ளதாக ஐ.சி.எம்.ஆர் கூறியுள்ளது. தற்போது வரை 73,52,911 பேருக்கு சோதனைகள் நடத்தப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 2,15,195 பேருக்கு சோதனை நடத்தப்பட்டுள்ளது.
அதே போன்று ஆய்வகங்களின் எண்ணிக்கை ஆயிரம் என்கிற அளவுக்கு உயர்ந்துள்ளது (730 அரசு மற்றும் 270 தனியார் ஆய்வகங்கள்) எனக் குறிப்பிட்டுள்ளது.