தலைநகர் என்றால் நாட்டுக்கோ மாநிலத்துக்கோ வழிகாட்டுவதாக இருக்கவேண்டும் என்பது பொதுவான எதிர்பார்ப்பு. இந்தியத் தலைநகரோ கொரோனா கொள்ளை நோய்த் தாக்கத்தில் அப்படியொரு நல்ல நிலைமையில் இல்லை என்பது சோகமான யதார்த்தம்.
கொரோனா பாதிப்பில் டெல்லி ஒன்றியப் பிரதேசமானது இரண்டாவது இடத்தில் இருக்கிறது. முன்னதாக மூன்றாவது இடத்திலிருந்துவந்த டெல்லியில் தொற்றும் உயிரிழப்புகளும் அதிகரித்தவண்ணம் உள்ளன. நீதிமன்றம் தலையிட்டு பிரதேச மற்றும் இந்திய ஒன்றிய அரசுகளுக்கு கூட்டு உத்தரவிடவேண்டிய அளவுக்கு தலைநகரின் நிலைமை மோசமானது. அதையடுத்து கடந்த வாரம் டெல்லி பிரதேச முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் சா மற்றும் உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.
உயிரிழப்புகள் கட்டுக்கடங்காமல் போவது ஒரு புறம், இறந்துபோனவர்களைப் புதைப்பதற்கோ எரிப்பதற்கோ அல்லாடுவது பெரும் சோகம். தலைநகர் டெல்லியில் மொத்தம் 13 எரியூட்டல் மையங்களும் 4 மயானங்களும் ஒரு கல்லறைத் தோட்டமும் உள்ளன. இவற்றில் 6 எரியூட்டல் மையங்களும் 4 மயானங்களும் ஒரே கல்லறைத் தோட்டமும் கோவிட் தாக்கம் உறுதிசெய்யப்பட்ட, சந்தேகிக்கப்படும் நோயாளிகள் அனைவருக்குமானவையாக ஒதுக்கப்பட்டுள்ளன. இவற்றுடன் உள்ளாட்சி அமைப்புகள் மேலும் ஆறு எரியூட்டல் மையங்களை கூடுதலாகப் பயன்படுத்த முடிவுசெய்தன. அந்த அளவுக்கு இறப்பு எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளது.
ஏப்ரல் மாதத்தில் எரியூட்டல் மையம் ஒன்றில் தினசரி 3-4 பேரின் உடல்கள் வந்ததுமாறி, அடுத்த மாதத்தில் எட்டு சடலங்கள் என அதிகரித்தது. இரட்டை இலக்கத்தில் அதிகரித்து ஜூனில் சில பல பத்துகளாக சடலங்கள் இறுதிக்கிரியைகளுக்காக குவிந்துவருகின்றன.
டெல்லியின் மிகப் பெரிய எரியூட்டல் மையமான நிகாம்போத் காட்டில் இருக்கக்கூடிய 48 தகனமேடைகளுடன் மேலும் 25 தகனமேடைகள் அமைக்கப்பட்டுள்ளன. மூன்று வாரங்களாக அங்கு தினமும் 50 பேரின் சடலங்கள் எரியூட்டப்படுகின்றன என்கிறது டெல்லி அரசின் புள்ளிவிவரம். இதுவரை இந்த அளவுக்கு மோசமான நிலைமையை எதிர்கொண்டதில்லை; நாங்கள் மிகவும் களைத்துப்போய்விட்டோம் என்கிறார்கள் அங்கிருக்கும் ஊழியர்கள்.
காலையில் உடலைக் கொண்டுவரும் உறவினர்களோ நண்பர்களோ மாலை அல்லது இரவுவரை காத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. நிகாம்போத் காட் எரியூட்டல் மையத்தைப் பராமரித்துவரும் வடக்கு டெல்லி நகராட்சி அதிகாரிகள், மருத்துவமனைகள்தான் காரணம் என அதிருப்தி தெரிவிக்கின்றனர். மொத்தமாக அவர்கள் சடலங்களை அனுப்புவதால் ஒரே நேரத்தில் கையாள்வது எங்களுக்கு சிரமமாக இருக்கிறது என்கின்றனர் நகராட்சி அதிகாரிகள்.
நிகாம்போத் காட்டில் குறைந்தது ஐந்து அவசர ஊர்திகளாவது வெளியே சடலங்களுடன் காத்திருக்கவேண்டியுள்ளது. இதில் அவசர ஊர்தி ஓட்டுநர்களின் பாடு மிக மோசம். மருத்துவமனைகளிலும் இவர்கள் சடலங்களை வண்டியில் ஏற்றுவதற்கு காத்திருக்கவேண்டி உள்ளது. இடுகாட்டிலும் சுடுகாட்டிலும் அதைப்போலவே காத்திருக்கவேண்டும் என்றால் அவர்களின் சோகத்தைப் பற்றி என்ன சொல்ல..! இதில் ஒரே அவசர ஊர்தியில் மூன்றுநான்கு சடலங்களை அனுப்பிவைத்து விடுகிறார்கள் என்கிறபோது, அங்கு நிலவும் அவலநிலையைப் புரிந்துகொள்ளலாம்.
பஞ்சாபி பாக் எரியூட்டல் மையத்தில் இடமில்லாத நிலை ஏற்படும்போது, அங்கிருந்து நிகாம்போத் காட்டுக்கு அவசர ஊர்திகள் திருப்பிவிடப்படுகின்றன. அங்கும் இதைப் போலவே மோசமான நிலைமைதான். நான்கு எரிவாயு தகனமேடைகளும் 71 விறகுமேடைகளும் அங்கு உள்ளன. கூடுதலாக இரண்டு இடங்களைத் தயார்செய்வதில் அரசுத் தரப்பு இப்போது இறங்கியுள்ளது.
முன்னரே இது குறித்து பிரதேச அரசு திட்டமிட்டு செயல்பட்டிருக்க வேண்டும் என்பது டெல்லி நகராட்சிகள் தரப்புகள் வைக்கும் விமர்சனம்.
காங்கிரஸ் பிரமுகர் அஜய் மாக்கான் இது தொடர்பான ஒரு வீடியோவை இணைத்து, தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட இடுகையால், விவகாரம் பெரிதானது. ”பாஞ்சாபி பாக் மையத்தில் தினசரி 65 - 75 சடலங்கள் எரியூட்டப்படுகின்றன. பசாய் தாராப்பூர் பகுதியைச் சேர்ந்த சிறுவனின் உடலை எரியூட்டுவதற்கு மூன்று நாள்கள் காத்திருக்கவைத்தார்கள்.” என அவர் டுவிட்டரில் எழுத, பிரதேச அரசும் நகராட்சிகளும் ’நீதான் நான் தான்’ என பரஸ்பரம் குற்றச்சாட்டுகளை வீசிக்கொண்டன.
டெல்லி உயர் நீதிமன்றம் தலையிட்டு கடுமையாக விமர்சித்ததும், உள்ளாட்சி அமைப்புகள், டெல்லி பிரதேச அரசு, தேசியத் தலைநகரைக் கட்டுக்குள் வைத்திருக்கும் ஒன்றிய அரசு மூன்று தரப்பும் கொரோனா விவகாரத்தில் கைகோர்க்கத் தொடங்கின.
இதற்கிடையில், ஜூலை கடைசிவரை டெல்லியில் கொரோனாவின் தாக்கம் குறையாது என்றும் ஜூலை கடைசிக்குள் தொற்றின் அளவு 5.5 லட்சம் பேருக்கு தொற்று ஏற்படும், என்றும் கூறப்பட்டிருப்பது, பதற்றத்தை இன்னும் கூட்டுவதாக இருக்கிறது.