Corona Virus

“கொரோனா காலத்திலும் மருத்துவ பணியாளர்கள் நியமனத்தில் காசு பார்க்கும் அரசு” - கடுமையாகச் சாடிய காங்கிரஸ்!

கொரோனா தொற்றால் மக்கள் உயிரிழக்கும் இந்த நிலையிலும், ஊழல்களை செய்வதும், தனியார் நிறுவனங்கள் மூலம் சுகாதாரப் பணியாளர்களை வேலைக்கு அமர்த்துவதும் மனிதநேயமற்ற செயல் என கே.எஸ்.அழகிரி சாடியுள்ளார்.

“கொரோனா காலத்திலும் மருத்துவ பணியாளர்கள் நியமனத்தில் காசு பார்க்கும் அரசு” - கடுமையாகச் சாடிய காங்கிரஸ்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மருத்துவப் பணியாளர்களை தனியார் மூலம் நியமித்து, பேரம் பேசும் அளவுக்கு விட்டது ஏன் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி மத்திய, மாநில அரசை கடுமையாகச் சாடியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“கொரோனா பேரிடர் காலத்தில் உயிரைக் கொடுத்து பணியாற்றும் மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும் ஊதியம் தராமல் இழுத்தடித்தால் கிரிமினல் தண்டணை கொடுக்கப்படும் என, மத்திய, மாநில அரசுகளைப் பார்த்து உச்சநீதிமன்றம் சொல்லியிருப்பது இந்திய வரலாற்றிலேயே முதல் முறையாக இருக்கும் என்று நினைக்கின்றேன்.

சமூகத்தில் மிக உயர்ந்த இடத்தில் வைத்து போற்றப்படும் மருத்துவர்கள், மற்றொரு தாயாக பாவிக்கப்படும் செவிலியர்கள், நோய் பரவலை எதிர்த்து நேரிடையாக போராடும் சுகாதாரப் பணியாளர்கள் இல்லாத சூழலை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. உயிரைப் பணயம் வைத்து உழைக்கும் இவர்களுக்கு ஊதியம் வழங்காமல் இழுத்தடிக்கும் இந்த அரசுகளின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாவதில் ஆச்சரியம் இல்லை.

“கொரோனா காலத்திலும் மருத்துவ பணியாளர்கள் நியமனத்தில் காசு பார்க்கும் அரசு” - கடுமையாகச் சாடிய காங்கிரஸ்!

தமிழகத்தில் பல முதுகலை பட்டம் பெற்ற மருத்துவர்கள் கடுமையாக கசக்கிப் பிழிந்து வேலை வாங்கப்பட்டு, பல மாதங்களாக ஊதியம் பெறாமல் அவதிப்படும் பரிதாப நிலையும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. உயிரைக் காப்பாற்றுவர்களையே மதிக்காத அரசுகள், உயிருக்குப் போராடும் ஏழை,எளிய நோயாளிகள் விஷயத்தில் எப்படி நடந்து கொள்வார்கள்?

தனியார் வேலை வாய்ப்பு நிறுவனங்கள் மூலம் தமிழகத்தில் சில நகராட்சி மருத்துவமனைகளில் கொரோனா பணிக்காக சில சுகாதாரப் பணியாளர்களை தினக்கூலி அடிப்படையில் தேர்வு செய்தனர். அவர்களுக்கு தினசரி ஊதியமாக ரூ.550 தருவது என உறுதி அளிக்கப்பட்டது. ஆனால் தற்போது ரூ.450 மட்டுமே தரமுடியும் என அந்த தனியார் வேலைவாய்ப்பு நிறுவனம் பேரம் பேசுகிறது. இவ்வாறு நடந்துகொள்ளும் அளவுக்கு அந்த நிறுவனத்துக்கு யார் தைரியம் கொடுத்தது?

சென்னையில் உள்ள மிக முக்கிய 5 அரசு மருத்துவமனைகளுக்கான 13 பிரிவுகளில் மொத்தம் 2,355 பணியாளர்கள் பணியிடங்களுக்கு தம்மிடம் விண்ணக்கலாம் என ஜென்டில்மேன் என்ற நிறுவனம் விளம்பரம் தந்தது. விண்ணப்பித்தவர்களிடம் மூன்று மாதகால தற்காலிக பணிக்கு ஒரு மாத ஊதியத்தை அந்த நிறுவனம் கமிஷனாகக் கேட்ட விவரம் ஊடகங்களில் வெளியானதையடுத்து, அந்த நிறுவனத்தின் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இத்தகைய செயல் வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல் உள்ளது.

கொரோனா தொற்றால் மக்கள் உயிரிழக்கும் இந்த நிலையிலும், ஊழல்களைச் செய்வதும், தனியார் நிறுவனங்கள் மூலம் சுகாதாரப் பணியாளர்களை வேலைக்கு அமர்த்துவதும் மனிதநேயமற்ற செயல் அல்லவா? சுகாதாரத்துறையில் உயர் பொறுப்பில் உள்ளவர்கள் இந்த இக்கட்டான நிலையிலும் ஊழல் செய்வது கவலை அளிப்பதாக உள்ளது. இதுபோன்ற அவலங்கள் நிகழும் சூழலில்தான், உச்சநீதிமன்றம் உரக்க குரல் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.

மருத்துவர்கள் எல்லாம் கடவுளுக்கு சமமானவர்கள் என்றும், சுகாதாரப் பணியாளர்களின் கால்களைக் கழுவி வணங்க வேண்டும் என அரசுகள் இதுவரை சொல்லிவந்தது கபட நாடகமே என்பதை, உச்ச நீதிமன்றம் தோலுரித்துக் காட்டியிருக்கிறது. உச்சநீதிமன்றத்தின் கோபத்தை பாடமாக எடுத்துக்கொண்டு மத்திய, மாநில அரசுகள் இனியாவது மனித நேயத்துடன் செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்.” இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories