இந்தியாவில் மும்பைக்கு அடுத்தபடியாக தமிழகத்தின் சென்னையிலேயே அதிகபடியான கொரோனா பாதிப்பு தினந்தோறும் உண்டாகி வருகிறது. இதுநாள் வரை 38 ஆயிரத்துக்கும் மேலானோர் சென்னையில் மட்டுமே பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
அறிகுறியற்ற கொரோனா நோயாளிகளில் தனிமைப்படுத்தப்பட்ட முகாமில் அனுமதிக்கப்பட்டு அரசு சார்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு முகாமில் உள்ளவர்களுக்கு அரசு மாநகராட்சி எவ்வித அடிப்படை வசதிகளும் செய்து தருவதில்லை என தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளது.
இந்நிலையில், சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் சென்னையின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த கொரோனா நோயாளிகள் 400 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அங்கு தரமான உணவுகள் கொடுக்கவில்லை என்றும், அடிப்படை தேவைகள் ஏதும் செய்யவில்லை எனக் கூறி அடிக்கடி நோயாளிகள் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர்.
அந்த வகையில், நேற்று இரவு கொடுக்கப்பட்ட சப்பாத்தியில் கம்பி இருந்ததால் முகாமில் இருந்த சுகாதார துறை மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகளிடம் நோயாளிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
முகாமில் தரப்படும் உணவுகளை உண்பதால் பெரும்பாலான நோயாளிகளுக்கு வயிற்றுப்போக்கு, வாந்தி போன்ற உபாதைகளால் அவதியுறுகின்றனர் என நோயாளிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர். மருத்துவர்களிடம் புகார் அளித்தும் எந்த பயனும் இல்லை. இதே நிலை நீடித்து வருவது பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தி வருகிறது.
கொரோனா வந்து இறப்பதைவிட தரமற்ற உணவை சாப்பிட்டு நோய் வந்து இறந்து விடுவோமோ என்ற அச்சம் ஏற்படுகிறது என தனிமைபடுத்தப்பட்ட கொரோனா நோயாளிகள் தெரிவிக்கின்றனர்,
கொரோனா நோயாளிகளுக்கு தரமான சிகிச்சை கொடுப்பதாக நித்தமும் ஊடகங்களில் பேட்டி அளித்து வரும் தமிழக அரசின் அமைச்சர்கள், அதிகாரிகள் எவருக்கும், நோயாளிகளுக்கு கொடுக்கப்படும் உணவுகளின் தரத்தை ஆய்வு செய்ய வேண்டும் என்பது கூட தெரியாமல் போய்விட்டதா என சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.