Corona Virus

கொரோனா தொற்றால் முதல் போலிஸ் பலி - இன்ஸ்பெக்டர் பாலமுரளியின் மறைவால் சோகத்தில் சென்னை காவல்துறை! #Corona

முதல் முதலாக கொரோனாவால் பாதிக்கப்பட்டதில் காவல் ஆய்வாளர் ஒருவர் சென்னையில் உயிரிழந்தது காவல்துறையினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தினந்தோறும் ஆயிரக்கணக்கில் அதிகரித்து வருகிறது. இதுவரை சென்னையில் மட்டும் 35 ஆயிரத்து 576 பேர் வைரஸ் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

அதில், கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் பணியில் முன்களத்தில் ஈடுபட்டுள்ளவர்களையும் இந்த கொரோனா தாக்கத் தவறவில்லை. மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர், மக்கள் பிரதிநிதிகள், தூய்மை பணியாளர்கள் என அனைத்து தரப்பினரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், சென்னை மாம்பலம் காவல் நிலைய சட்ட ஒழுங்கு ஆய்வாளராகப் பணியாற்றி வந்த பாலமுரளி என்பவர் கொரோனாவின் பிடியில் சிக்கி, சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று மாலை உயிரிழந்தார். அவருக்கு வயது 47.

கொரோனா தொற்றால் முதல் போலிஸ் பலி - இன்ஸ்பெக்டர் பாலமுரளியின் மறைவால் சோகத்தில் சென்னை காவல்துறை! #Corona

கொரோனா தடுப்பு நடவடிக்கையில் முழுவீச்சில் பணியாற்றி வந்த பாலமுரளி கடந்த 5ம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார். இரண்டு நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட அவருக்கு 7ம் தேதி காய்ச்சல் அதிகமானதால், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

ஜூன் 11ம் தேதியன்று அவரது உடல்நிலை மோசமானதால் மாநகர காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் சொந்தச் செலவில் தடுப்பூசிகளை வரவழைத்து சிகிச்சையளிக்க உதவினார். அதன் பிறகு சற்று தேறிவந்த பாலமுரளியின் உடல்நிலை, திடீரென இன்று காலை மீண்டும் கவலைக்கிடமானது.

அப்போது செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும், காவல் ஆய்வாளர் பாலமுரளியின் உடல்நிலை சிகிச்சைக்கு ஒத்துழைக்க முடியாமல் போயுள்ளது. இறுதியில் அவரது உயிரும் பிரிந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் முதல் முதலாக காவல் ஆய்வாளர் ஒருவர் உயிரிழந்தது காவல்துறையினர் இடையே பெரும் அதிர்ச்சியையும், ஆழ்ந்த சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆய்வாளர் பாலமுரளியின் தந்தையும் முன்னாள் காவல் ஆய்வாளர் ஆவார்.

banner

Related Stories

Related Stories