ஊடகங்கள் மற்றும் பத்திரிகை செய்திகளின் அடிப்படையில் நாடு முழுவதும் உள்ள குழந்தைகள் காப்பகங்களில் கொரோனா தொற்று தொடர்பாக உச்சநீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்குப் பதிவு செய்து கடந்த வாரம் விசாரணை நடத்தியது.
அப்போது, சென்னை ராயபுரத்தில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் 35 சிறுவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது தொடர்பாக தமிழக அரசு அறிக்கை அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து, இன்று வழக்கு விசாரணைக்கு வந்த போது தமிழக அரசு அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அதில், ராயபுரம் காப்பகத்தில் உள்ள குழந்தைகளுக்கு முதலில் சாதாரண காய்ச்சல் வந்ததையடுத்து பரிசோதனை செய்யப்பட்டபோது கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
அதில் 19 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று நோய்கான எந்த அறிகுறிகள் இல்லாத நிலையில் கொரோனா கண்டறியப்பட்டது. அவர்களுக்கு எங்கிருந்து நோய் தொற்று பரவியது என்பது கண்டறிய முடியவில்லை. அது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது என்று கூறப்படுள்ளது.
இதனை அடுத்து வழக்கு அடுத்த வாரம் விசாரணைக்கு வரும் போது இந்த அறிக்கை மீதான விசாரணை நடைபெறும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஏற்கெனவே சமூக பரவல் ஏற்பட்டிருக்குமோ என அச்சத்தில் இருக்கும் மக்களுக்கு அரசின் இந்த அலட்சியமான பதில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.