இந்தியாவிலேயே அதிகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. சென்னையில் மட்டுமே 30 ஆயிரத்துக்கும் மேலானோர் பாதிக்கப்பட்டுள்ளதால் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின், மருத்துவ நிபுணர்கள் என பலரும் கடுமையான ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், 6வது முறையாக முதலமைச்சருடனான மருத்துவக் குழு நிபுணர்களின் ஆலோசனை இன்று காலை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. சுமார் ஒரு மணிநேர ஆலோசனைக் கூட்டத்துக்கு மருத்துவக் குழு நிபுணர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது அவர்கள் பேசியதாவது,
“முதலமைச்சருடனான ஆலோசனைக் கூட்டத்தில் உலக சுகாதார அமைப்பின் செளமியா சாமிநாதன், அருண் குமார், பிரதீபா உள்ளிட்ட நிபுணர்கள் காணொலி காட்சி மூலம் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில் நோய் பரவலை கட்டுப்படுத்துவதற்கான ஆலோசனைக்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. நோய்த் தொற்று உயர்ந்து குறையும் என ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டது போன்று தற்போது கொரோனா தொற்று உச்சத்தில் உள்ளது.
சென்னையில் அதிகபடியாக கொரோனா பாதிப்புகள் பதிவாகி வருவதால் பரிசோதனை எண்ணிக்கையை அதிகரித்திருக்கிறார்கள். 17 ஆயிரத்து 500 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கிறது.
அதேபோன்று தமிழகம் முழுவதும் 75 ஆயிரம் படுக்கைகள் அரசு தயார் நிலையில் வைத்திருக்கிறது. மருத்துவக் கல்லூரிகளில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவுகளில் 5 ஆயிரம் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது. மருத்துவர்கள், செவிலியர்கள், ஆய்வக பணியாளர்கள் என 12,500 பேர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், கூடுதலாக 2500 செவிலியர்களை நியமித்துள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் 4,5,6 ஆகிய மண்டலங்கள் தொற்று பாதிப்பு எண்ணிக்கை உச்சத்தில் உள்ளது. ஆகவே சென்னையில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை கடுமையாக்கும்படி அரசிடம் பரிந்துரைத்துள்ளோம். தளர்வுகளை குறைத்து நோய் பரவலை தடுப்பதற்கான ஆலோசனைகளை வழங்கியுள்ளோம்.
மக்கள் கட்டாயம் வெளியே செல்லும் போது முகக்கவசங்களை முறையாக அணிந்திருக்க வேண்டும். கூட்டம் சேரும் வகையில் கூடக் கூடாது. சமூக இடைவெளியை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். இவற்றை செய்யாவிட்டால் அடுத்த இரண்டு முதல் நான்கு மாதங்களில் இரண்டாவது அலை உண்டாகும்.
மக்கள் சமூக பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். அச்சத்தை கைவிட்டு முன்னெச்சரிக்கையாக செயல்படவேண்டிய தருணமிது. கடுமையான உடல் வலி, தலை வலி, லேசான காய்ச்சல் இருந்தாலும் அலட்சியப்படுத்தாமல் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.” எனக் கூறியுள்ளனர்.