சென்னையில் கொரோனா பரிசோதனை செய்துகொண்ட 277 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. அவர்களை கண்டறிவதற்காக கொடுக்கப்பட்ட விவரங்களை வைத்து தொடர்பு கொண்டதில் அவை அனைத்தும் போலியானவை என தெரியவந்துள்ளது.
இதையடுத்து, போலி முகவரி மற்றும் தொலைப்பேசி எண்கள் கொடுத்து சோதனை செய்துகொண்ட அந்த 277 பேரையும் கண்டுபிடிக்க சென்னை மாநகராட்சி நிர்வாகமும், போலிஸாரும் திணறி வருகின்றனர்.
ஏற்கெனவே சென்னையில் தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் தொற்று பாதிப்புடன் தலைமறைவானவர்கள் பொது வெளியில் சுற்றித்திரிந்தால் கொரோனா பரவல் மேலும் அதிகமாகி மிகப்பெரிய பாதிப்பு உண்டாகும் என தெரிவிக்கப்பட்டு வருகிறது.
எனவே, இனி வரும் காலங்களில் கட்டாயம் ஆதார் அடையாள அட்டையை அடிப்பையாக கொண்டு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று மாநகராட்சி நிர்வாகம் தனியார் பரிசோதனை மையங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
முன்னதாக, தமிழக அரசின் சுகாதாரத்துறையோ மாநிலத்தில் கொரோனா தாக்கத்தில் சமூக பரவல் ஏற்படவில்லை என தொடர்ந்து கூறி வருகிறது. ஆனால் தற்போது வைரஸ் பாதிப்புள்ள 277 பேர் தலைமறைவாகி இருப்பது மக்களிடையே மேலும் வைரஸ் பரவல் குறித்த அச்சம் மேலோங்கும் என்றும் இதனால் சக மனிதர்களை எப்போதும் சந்தேக நோக்கத்தோடு பார்க்க நேரிடும் என சமூக ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.