சென்னையில் தினந்தோறும் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை ஆயிரமாயிரமாக உயர்ந்து வருகிறது. இதில் சாமானிய மக்கள் மட்டுமல்லாமல் கொரோனாவுக்கு எதிராக களத்தில் போராடும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள், காவல்துறையினர் என பலரும் கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர்.
அவ்வகையில் சென்னையில் மட்டுமே கொரோனாவால் இதுவரை 155 செவிலியர்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அதில், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 50 பேரும், ஓமந்தூரார் மருத்துவமனையில் 45 பேரும், ஸ்டான்லின் மருத்துவமனையில் 30 பேரும், கே.எம்.சி மருத்துவமனையில் 15 பேரும், கஸ்தூரிபா காந்தி மகப்பேறு மருத்துவமனையில் 5 பேரும், தண்டையார்பேட்டை புறநகர் மருத்துவமனையில் 6 பேரும், தண்டையார்பேட்டை ஆர்.எஸ்.ஆர் மருத்துவமனையில் 4 என 135 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு நலம்பெற்றிருக்கிறார்கள். எஞ்சியுள்ள 20 செவிலியர்களும் ஐஐடி காப்பகத்திலும், வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே, அவ்வாறு வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் தலைமை செவிலியர் பிரிசில்லா உயிரிழந்தது கடந்த 2 வாரங்களுக்கு முன்பு நிகழ்ந்தது. ஆனால் மருத்துவமனை நிர்வாகமும் அரசும் அவர் கொரோனாவால் இறக்கவில்லை என அப்பட்டமாக பொய் உறைத்தது.
இந்நிலையில், அதே மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த தங்க லஷ்மி என்ற மற்றொரு செவிலிய கண்காணிப்பாளர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ள அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது. 56 வயதான தங்க லஷ்மி 1998ம் ஆண்டு முதல் 22 ஆண்டுகளாக ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்துள்ளார்.
இவருக்கு மார்ச் மாதமே கொரோனா தொற்று ஏற்பட்டு 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பிறகு கொரோனாவில் இருந்து குணமடைந்த தங்க லஷ்மி மீண்டும் பணிக்கு திரும்பியிருக்கிறார். இந்நிலையில், அவருக்கு மீண்டும் தொற்று உறுதியானதால் ராஜீவ் காந்தி மருத்துவமனையிலேயே சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
CT ஸ்கேன் எடுக்கப்பட்டதில் அவருக்கு கொரோனாவின் கிளேட் 3 பாதிப்பு இருப்பது தெரியவந்ததால் உடல் நிலை கவலைக்கிடமானதை தொடர்ந்து செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதனையடுத்து சிகிச்சை பலனளிக்காமல் செவிலியர் தங்க லஷ்மி இன்று உயிரிழந்தார்.
அவரது மறைவு உடன் பணியாற்றிய செவிலியர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த முன்கள பணியாளர்களில் 2வதாக செவிலியர் பலியானது பெரும் அச்சத்தை உண்டாக்கியுள்ளது. ஆகவே இனியும் தாமதிக்காமல் அதிகபடியான பரிசோதனைகளை மேற்கொள்ள விரைவான நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.