Corona Virus

“கொரோனாவா? வராதீர்கள்.. படுக்கைகளே இல்லை என மறுக்கும் மருத்துவமனைகள்” - நடிகரின் அதிர்ச்சி அனுபவம்!

மருத்துவமனைகளில் காலி படுக்கைகளே இல்லையென்பது குறித்து பகிர்ந்த நடிகர் வரதராஜன் மீது வழக்குப் பதியப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னையில் கொரோனா பரவல் காரணமாக ஒவ்வொரு நாளும் ஆயிரத்துக்கும் மேலானோர் பாதிக்கப்பட்டு வருவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது. நேற்று வரையில் 21 ஆயிரத்து 149 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், 10 ஆயிரத்துக்கும் மேலானோர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில் எஞ்சியுள்ளோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஆனால், உண்மை நிலையோ வேறு கோணத்தில் உள்ளது. சென்னையில் மட்டுமே ஜூன் 4ம் தேதி வரையில் 398 பேர் உயிரிழந்திருப்பதாகவும், அதனை எடப்பாடி அரசின் சுகாதாரத்துறை திட்டமிட்டு மறைத்து மக்களின் உயிருடன் விபரீதமாக விளையாடி வருவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

“கொரோனாவா? வராதீர்கள்.. படுக்கைகளே இல்லை என மறுக்கும் மருத்துவமனைகள்” - நடிகரின் அதிர்ச்சி அனுபவம்!

அதேபோல, சென்னையில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லாத காரணத்தால் கொரோனா தொடர்பான அறிகுறிகள் ஏற்பட்டால், முன்னரே தொடர்புகொண்டு படுக்கை வசதிகள் உள்ளனவா என்று தெரிந்துகொண்ட பிறகு வரவேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்களிடையே பெரும் அதிர்ச்சியும் ஏற்பட்டுள்ளது.

மேலும், கொரோனா தவிர வேறு ஏதேனும் பிரச்னைகள் இருந்தாலும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க மறுப்புத் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இதுபோன்ற அலைக்கழிப்பு நேரத்தில் நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படாத காரணத்தால் உயிரிழக்கவும் நேரிடுகிறது.

இந்த நிலையில், பிரபல நடிகரான வரதராஜன் தன்னுடைய நண்பருக்கு நேர்ந்த அதிர்ச்சி நிறைந்த அனுபவத்தை சமூக வலைதளத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.

அதில், “நெருங்கிய நண்பருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பிற்கான தீவிர அறிகுறிகள் உண்டாகியுள்ளது. மருத்துவமனைக்குச் சென்று பரிசோதிக்கலாம் என எத்தனித்தபோது, எந்த அரசு மற்றும் தனியார் மருத்துவமனையிலும் படுக்கை காலியாக இல்லை. மருத்துவமனைக்கு அழைத்து வரவேண்டாம் என்றும் வெளிப்படையாக கூறிவிட்டார்கள்.

பெயர்பெற்ற தனியார் மருத்துவமனையின் முதல்வர், நிர்வாகம் என அனைவரிடமும் பேசியும், தலைமைச் செயலக அதிகாரியிடம் கேட்டும் எதுவும் கைகூடவில்லை. நண்பருக்கு எப்படி தொற்று ஏற்பட்டது என்றே தெரியவில்லை. அவர் நித்தமும் சுகாதாரத்தை ஒழுங்காக கடைபிடிக்கக் கூடியவர்” என வரதராஜன் தன்னுடைய பதிவில் கூறியுள்ளார்.

அதையடுத்து, நமக்கு எதுவும் ஆகாது என்று காத்திரமான நம்பிக்கையோடு மக்கள் வெளியே நடமாட வேண்டாம். அத்தியாவசிய தேவைக்காக வெளியே சென்றாலும் முகக்கவசம் அணிவது தனிமனித இடைவெளி போன்ற கட்டுப்பாடுகளை கடுமையாக கடைபிடியுங்கள், வீட்டிலேயே பாதுகாப்பாக இருங்கள் என வலியுறுத்தியுள்ளார்.

இவ்வாறு வரதராஜன் பேசிய வீடியோ வைரலானதை அடுத்து, மருத்துவமனைகளில் படுக்கைகளே இல்லையென தவறான தகவலை பரப்பியுள்ளார் எனக் கூறி அவர் மீது தொற்றுநோய் சட்டப்பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

தனது கண்ணுக்கு முன்பே நடந்த அதிர்ச்சிகரமான அனுபவம் குறித்து வரதராஜன் கூறியதற்கு நடவடிக்கை என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்திருப்பது அதிகாரவெறியின் உச்சம் என விமர்சனங்கள் எழுந்துள்ளன.

banner

Related Stories

Related Stories