தமிழகத்தில் இன்று 12 ஆயிரத்து 49 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதில் வெளி மாநிலங்கள் மற்றும் நாடுகளில் இருந்து வந்த 95 பேர் உட்பட 1,149 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 22 ஆயிரத்து 333 ஆக அதிகரித்துள்ளது. முதல் முறையாக ஒரே நாளில் 13 பேர் தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்திருக்கிறார்கள். ஆகவே பலி எண்ணிக்கையும் 173 ஆக உயர்ந்துள்ளது.
நேற்றுவரை 12 ஆயிரம் பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று மேலும் 757 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஆனால் சமீப காலங்களாக டிஸ்சார்ஜ் செய்யப்படுவர்கள் எவரும் பூரணமாக கொரோனாவில் இருந்து மீண்டுவிட்டார்களா இல்லையா என்பதை சுகாதாரத்துறை அறிவிக்கவில்லை.
வழக்கம் போல், இன்றும் சென்னையில்தான் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. ஆனால் இதுவரை இல்லாத அளவுக்கு முதல் முறையாக 804 பேருக்கு ஒரே நாளில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த எண்ணிக்கை 14 ஆயிரத்து 802 ஆக உள்ளது.
அதிகபட்ச பாதிப்பு மட்டுமல்லாமல் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் சென்னையிலேயே அதிகமாக உள்ளது. அதன்படி இதுவரை சென்னையில் 129 பேர் கொரோனாவால் உயிரிழந்திருக்கிறார்கள். அதில் இன்று மட்டும் 10 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
மேலும், 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள், சிறுவர் சிறுமியர்கள் மட்டுமே 1,286 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல 6 வயதுக்கு மேல் உள்ளவர்கள் 2,052 பேரும், 13-60 வயதுக்கு உட்பட்டவர்கள் 18 ஆயிரத்து 995 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.