நான்காம் கட்ட ஊரடங்கு நாளையுடன் நிறைவடைய உள்ள நிலையில், தமிழகம் உட்பட நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு தினந்தோறும் அதிகரித்தே வருகிறது. இதன் காரணமாக நாடு முழுவதும் மேலும் 2 வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்பிருப்பதாகவே தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், சென்னையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மருத்துவ நிபுணர் குழுவினருடன் ஊரடங்கு நீட்டிப்பது தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டார். அதன்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த நிபுணர் குழுவினர் முதலமைச்சரிடம் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் குறித்து செய்தியாளர்கள் சந்திப்பின்போது தெரிவித்தனர்.
அப்போது அவர்கள் கூறியதாவது :
அதிகமான மக்கள் இருப்பதால், நகர்ப்புறங்களில் வைரஸ் தொற்று ஏற்படுகிறது. தொற்று அதிகரிப்பதால், மருத்துவமனைகளில் படுக்கை வசதிகளும் அதிகரிக்கப்பட்டு வருகிறது. பரிசோதனைகளை அதிகரிக்கும்போது, பாதிப்பு எண்ணிக்கையும் அதிகரிக்கும். ஆகவே, அதனை எண்ணி மக்கள் அச்சமடைய வேண்டாம்.
சென்னையைத் தவிர மற்ற மாவட்டங்களில் கொரோனா தொற்று கட்டுக்குள் உள்ளது. மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிவது அவசியம். மற்ற நாடுகளில் முகக்கவசம் அணிவதன் மூலம் கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் ஊரடங்கை நீட்டிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் அனைவரும் தங்களை தற்காத்துக் கொள்வது அவசியம். உடல்நிலை சரியில்லை என்றால் வெளியில் செல்லக்கூடாது. வயதானவர்கள் நோயாளிகளாக இருக்கக் கூடியவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படக்கூடும். எனவே அவர்களைப் பாதுகாப்பாக கவனித்துக்கொள்ள வேண்டும்.
சென்னையில் உள்ள 4,5,6 ஆகிய மண்டலங்களில் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. தற்போதைய சூழலில் சென்னையில் வழிப்பாட்டுத் தலங்களுக்கோ, போக்குவரத்துக்கோ அனுமதியில்லை. கூடுதல் தளர்வுகள் ஏதும் அளித்தால் உயிருக்கே ஆபத்து நேரலாம்.