Corona Virus

சென்னையில் சமூகப் பரவல் நிலையில் கொரோனா பாதிப்பு? : மழுப்பும் அரசு - அம்பலப்படுத்திய மருத்துவக் குழு!

கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 13 ஆயிரத்தை கடந்த பின்னும் 2ம் நிலையில் தான் தொற்று பரவல் உள்ளது என ஆளும் அ.தி.மு.க அரசு கூறிவருகிறது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழகத்தில் கடந்த ஒரே வாரத்தில் 5 ஆயிரத்து 672 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு இன்றைய பாதிப்பு எண்ணிக்கை 938 ஆக உள்ளது. ஒட்டுமொத்த பாதிப்போ 21 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

அதேசமயத்தில் நாளுக்கு நாள் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அதிலும் சென்னையில் மட்டுமே இதுவரை 13 ஆயிரத்து 980 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

15 மண்டலங்களில் ராயபுரம், கோடம்பாக்கம், திரு.வி.க நகர், தண்டையார்பேட்டை, தேனாம்பேட்டை, அண்ணாநகர் என 6 மண்டலங்களில் ஆயிரத்துக்கும் மேலானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் மட்டுமே நேற்றைய நிலவரப்படி 2 ஆயிரத்து 446 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

சென்னையில் சமூகப் பரவல் நிலையில் கொரோனா பாதிப்பு? : மழுப்பும் அரசு - அம்பலப்படுத்திய மருத்துவக் குழு!

இவ்வாறாக நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு சென்னையில் மட்டுமே நூற்றுக்கணக்கில் அதிகரித்து வருகிறது. கொரோனா பாதிக்கப்படுவதற்கான அறிகுறிகள் ஏதும் தெரியாததால், எவருக்கு தொற்று பாதிப்பு இருக்கிறது என்றே தெரியாமல் மக்களும் வாழ்வாதாரம் வேண்டி வேறு வழியில்லாமல் வெளியே வரும் சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

பொதுப் போக்குவரத்து, வணிக வளாகங்கள், தியேட்டர்களுக்கான தடையை தவிர மற்ற அனைத்துவிதமான கடைகளையும் திறக்க அனுமதித்து மக்கள் நடமாட்டத்தை அதிகரித்து இயல்பு வாழ்க்கையை உண்டாக்கி வருகிறது அ.தி.மு.க அரசு. அதேசமயத்தில், சென்னையில் இதுகாறும் கொரோனா தொற்று மூன்றாம் நிலையான சமூக பரவலை எட்டவில்லை என தொடர்ந்து எடப்பாடி அரசும், அதன் அமைச்சர்களும் வாய்ப்பந்தல் இட்டு வருகின்றனர்.

ஆனால், 5வது முறையாக முதலமைச்சர் பழனிசாமியுடனான ஆலோசனைக்கு பிறகு பேட்டியளித்த மருத்துவ நிபுணர்கள் குழுவினர், சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் கொரோனா பரவல் கட்டுக்குள் இருப்பதாகவும், மக்கள் தங்களை பொறுப்புடன் தற்காத்துக் கொள்ளவேண்டியது அவசியம் என்றும் கூறியுள்ளனர்.

இதன் மூலம், சென்னையில் கொரோனா வைரஸ் பரவும் நிலை 3ம் கட்டத்தை எட்டியுள்ளதாகவே கருதப்படுகிறது. ஆனால், ஆளும் அரசோ, ஒப்புக்காக தினந்தோறும் வெளியிடும் பாதிப்புகள் குறித்த அறிக்கையில், தொற்றுள்ளவர்கள் ஏற்கெனவே பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருப்பதாகவே குறிப்பிடுகிறது. ஆனால் கள நிலையோ அவ்வாறு இருப்பதாகத் தெரியவில்லை என அரசியல் நோக்கர்கள், சமூக ஆர்வலர்கள் சந்தேகிக்கின்றனர்.

தொடர்ந்து பரவலான பரிசோதனையை அதிகரித்து, தொற்றுள்ளவர்களை கண்டறிந்து உரிய சிகிச்சை வழங்கும்படி திமுக தலைவர் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களும் நித்தமும் வலியுறுத்தி வரும் நிலையில் அதிமுக அரசோ அவற்றை செவிமடுப்பதாகவே தெரியவில்லை என குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளது.

banner

Related Stories

Related Stories