2019ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் சீனாவின் வூஹான் மாகாணத்தில் உருவான கொரோனா வைரஸ் எனும் பெருந்தொற்று உலகின் 215 நாடுகளில் பரவி ஆட்டிப்படைத்து வருகிறது. முதன் முதலில் உருவான சீனாவே 14ம் இடத்தில் இருக்கும் நிலையில், மோசமான பாதிப்பு எண்ணிக்கையை பெற்று உலக வல்லரசான அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. 17 லட்சத்துக்கும் அதிகமான வைரஸ் பாதிப்புகளை பெற்றுள்ள அமெரிக்காவில் மட்டும் இதுவரை 1 லட்சத்து 572 பேர் பலியாகியிருக்கிறார்கள்.
முதல் பத்து நாடுகளின் பட்டியலில் தற்போது இந்தியாவும் இணைந்துள்ளது. 60 நாட்களுக்கும் மேலான ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்த போது, 1.51 லட்சத்து 876 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இறப்பு எண்ணிக்கையில் இந்தியா மற்ற நாடுகளை விட பின் தங்கியிருந்தாலும் பாதிப்பு எண்ணிக்கை கூடிக்கொண்டே வருவது மக்களிடையே பெரும் அச்சத்தையும், பதற்றத்தையுமே ஏற்படுத்தியுள்ளது.
இப்படி இருக்கையில், பல்வேறு நாடுகளில் ஊரடங்கில் தளர்வுகளை கொண்டு வந்ததன் மூலம் தனிந்திருந்த கொரோனா தாக்கம், இரண்டாம்கட்ட பரவலாக உருவெடுத்துள்ளது. இந்த நிலையில், உலக சுகாதார அமைப்பின் நெருக்கடி கால நடவடிக்கைகளுக்கான தலைவர் மைக் ராயன் இந்த ஆண்டு இறுதியில் மீண்டும் கொரோனா தாக்கம் உச்சம் பெறும் என எச்சரிக்கும் வகையில் பேசியுள்ளார்.
ஜெனீவாவில் நடந்த காணொலி செய்தியாளர்கள் சந்திப்பின் போது மைக் ராயன் பேசியதன் விவரம்:-
உலகின் பல்வேறு நாடுகள் இன்றளவும் கொரோனாவின் முதற்கட்ட தாக்குதலில் இருந்து வருகிறது. குறிப்பாக, மத்திய, தென் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், ஆப்பிரிக்கா மற்றும் தெற்காசிய நாடுகளில் கொரோனாவினால் ஏற்படும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இவ்வாறாக சூழல் இருக்கும் நிலையில், கடல் அலைகளை போல், இந்த ஆண்டு இறுதியில் முதல் அலை தணிந்த நாடுகளில் மீண்டும் கொரோனா தன்னுடைய ஆட்டத்தை தொடங்கக்கூடும். அதுபோக, இரண்டாவது அலையின் போது பாதிப்புகள் எண்ணிலடங்காத வகையில் இருக்கும்.
ஏற்கெனவே பல நாடுகளில் இரண்டாவது அலை தொடங்கி இருக்கும் நிலையில், இன்னும் சில நாடுகளில் ஓரிரு மாதங்களிலேயே கொரோனா பாதிப்பின் இரண்டாவது அலை தொடங்கக் கூடும். ஆகவே பொது சுகாதாரம், கண்காணிப்பு மற்றும் பரிசோதனை போன்ற தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட வேண்டும் என உலக நாடுகளுக்கு அறிவுறுத்தலோடு எச்சரிக்கையும் மைக் ராயன் விடுத்துள்ளார்.