தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 776 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. அதில், வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள் 87 பேர் நீங்கலாக தமிழகத்தில் மட்டுமே 689 பேருக்கு தொற்று பாதிக்கப்பட்டுள்ளது.
ஆகவே, மொத்த பாதிப்பு 13 ஆயிரத்து 967 ஆக உயர்ந்துள்ளது. இன்று 12 ஆயிரத்து 100 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 479 ஆண்களுக்கும், 297 பெண்களுக்கும் வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள மொத்த கொரோனா பரிசோதனை ஆய்வகங்களின் எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளது. தனியார் ஆய்வகங்கள் 25 ஆகவும், அரசு ஆய்வகங்கள் 41 ஆக உள்ளது.
இன்று பாதிக்கப்பட்ட 689 பேரில் சென்னையில் மட்டுமே 567 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8 ஆயிரத்து 795 ஆக உயர்ந்துள்ளது. 12 வயதுக்குட்பட்ட 51 பேருக்கு இன்று கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 6,282 ஆக தமிழகத்தில் அதிகரித்துள்ளது. இன்று மட்டுமே 400 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். கடந்த 3 நாட்களாக அதிகமாக இருந்த டிஸ்சார்ஜ் எண்ணிக்கை இன்று 400 ஆக குறைந்துள்ளது.
மேலும், இன்று ஒரே நாளில் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 7 ஆக உள்ளது. இதையடுத்து, மொத்தம் 94 பேர் கொரோனாவுக்கு பலியாகியிருக்கிறார்கள். இன்று உயிரிழந்த 7 பேரும் சென்னையைச் சேர்ந்தவர்கள் ஆவர். சென்னையில் மட்டுமே உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 65 ஆக உள்ளது.
சென்னையில் 3,048 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், 5681 பேருக்கு சென்னையில் கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் மொத்தமாக 7,588 பேருக்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.