தமிழகத்தில் இன்று 11 ஆயிரத்து 441 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் 743 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. அதில் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள் 83 பேருக்கு தொற்று பாதிப்பு உள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 13 ஆயிரத்து 191 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையைப் பொறுத்தவரையில் நேற்று 552 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் இன்று 557 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 8 ஆயிரத்தை கடந்து மொத்தமாக 8,228 ஆக பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
மேலும் இன்று ஒரே நாளில் 987 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில் இதுவரை 5 ஆயிரத்து 882 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். சென்னையில் மட்டும் இதுவரை 2,823 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆக மொத்தம் தற்போது, 7,219 பேருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
பாதிப்பு, டிஸ்சார்ஜ் எண்ணிக்கையை போன்று தினந்தோறும் உயிரிழக்கும் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அவ்வகையில் இன்றும் கொரோனாவுக்கு மூன்று பேர் உயிரிழந்த நிலையில் 87 ஆக பலி எண்ணிக்கை உயர்ந்துள்ளது. மூவரில் இருவர் சென்னையிலும் ஒருவர் திருவள்ளூரிலும் உயிரிழந்திருக்கிறார்கள்.
இன்று பாதிக்கப்பட்ட 743 பேரில் 52 பேர் 12 வயதுக்குட்பட்ட சிறார்கள் மற்றும் குழந்தைகள் ஆவர். 442 பேர் ஆண்களுக்கும், 301 பெண்களுக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை 8,496 ஆண்களுக்கும், 4,692 பெண்களுக்கும், 3 திருநங்கைகளுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று 19 மாவட்டங்களில் இருந்த பாதிப்பு எண்ணிக்கை இன்று 12 மாவட்டங்களாக குறைந்துள்ளது.