மேற்கு வங்க மாநிலம் தெற்கு கொல்கத்தா பகுதியைச் சேர்ந்தவர் நிதாய்தாஸ் முகர்ஜி (52). அவருக்கு கடுமையான இருமல் மற்றும் சளி ஏற்பட்டதோடு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டதால், அவரது குடும்பத்தினர் அவரை மார்ச் 29ம் தேதி தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
கொரோனா அறிகுறிகளோடு அனுமதிக்கப்பட்ட அவரது உடல்நிலை மோசமடைந்ததால், வென்ட்டிலேட்டரில் வைத்தனர். அடுத்த நாள், அவரது சோதனை முடிவுகள் மூலம் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. மேலும் அவரது உடல்நிலை மோசமடைந்ததால், தொடர்ந்து அவரை 38 நாட்கள் வென்டிலேட்டரில் வைத்திருந்தனர்.
38 நாட்கள் வென்டிலேட்டரில் இருந்தபின் கொரோனா பாதிப்பில் இருந்து தப்பிய நிதாய்தாஸ் முகர்ஜி, இந்த வார தொடக்கத்தில் வீடு திரும்பினார். கொரோனாவிலிருந்து குணமடைந்த அவரை அவரது தெருவைச் சேர்ந்தவர்கள் சிறப்பாக வரவேற்றுள்ளனர்.
கொரோனா நோயாளி வென்டிலேட்டரில் நீண்ட காலம் வைத்திருந்தால் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புகள் மிகக்குறைவு என கூறப்படும் நிலையில் 38 நாட்கள் வென்ட்டிலேட்டரில் வைக்கப்பட்டு, காப்பாற்றப்பட்டுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து குணமடைந்த நிதாய்தாஸ் முகர்ஜி கூறும்போது, “எனக்கு ஒரு புதிய வாழ்க்கையை வழங்கிய மருத்துவர்கள் குழுவுக்கு நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இது எனது இரண்டாவது ஜென்மம். அவர்கள் இல்லாமல் நான் இல்லை அவர்கள் தான் உண்மையான ஹீரோக்கள்” என நெகிழ்ந்துள்ளார்.
மருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்ட அறி்க்கையில், “38 நாட்கள் வென்ட்டிலேட்டரில் இருந்தபோதிலும், வைரஸை தோற்கடித்த கொரோனா பாதிப்பின் முதல் நோயாளியாக இந்தியாவில் அவர் ஒரு சாதனையை நிகழ்த்தி உள்ளார்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.