தமிழகத்தில் கொரோனாவுக்கு நேற்று வரை 40 பேர் பலியாகி இருந்தனர். இந்நிலையில் இன்று கூடுதலாக 4 பேர் கொரோனாவுக்கு பலியாகியிருப்பதாக தமிழக அரசின் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
ஆனால், கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையிலும், உயிரிழப்பு எண்ணிக்கையிலும் தமிழக அரசு தொடர்ச்சியாக தவறான தகவல்களை அளித்து வருவதாகக் குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.
அந்தக் குற்றச்சாட்டு இன்று மேலும் வலுவடைந்துள்ளது. கொரோனா காரணமாக உயிரிழந்த சென்னை மாநகராட்சி பணியாளர் ஒருவரது பெயர் கொரோனாவால் உயிரிழந்தோர் பட்டியலில் இடம்பெறாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை தேனாம்பேட்டை மண்டலத்தில் மாநகராட்சி சுகாதார பணியாளராக கடந்த 7 ஆண்டுகளாகப் பணியாற்றி வரும் 45 வயதுடைய ஒருவர் கொரோனா தொற்று காரணமாக கடந்த 10 நாட்களுக்கு முன்பு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் இன்று காலை உயிரிழந்துள்ளார். இந்தச் சோக நிகழ்வைத்தான் அரசு திட்டமிட்டு மறைத்ததாகக் குற்றம்சாட்டப்படுகிறது.
கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபடும் சுகாதாரப் பணியாளர்கள் உயிரிழக்க நேர்ந்தால் ரூபாய் 50 லட்சம் வழங்கப்படும் என தமிழக அரசு பல்வேறு கோரிக்கைகளுக்குப் பின்னர் அறிவித்திருந்தது.
அந்த நிவாரண உதவி வழங்குவதைத் தவிர்க்கவே, மாநகராட்சி பணியாளர் உயிரிழந்ததை கொரோனா காரணமாக அல்ல என அ.தி.மு.க அரசு மறைக்க முயற்சிப்பதாகக் கூறப்படுகிறது.
பேரிடர் காலத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து தராததோடு, நிவாரணம் வழங்குவதைத் தவிர்ப்பதற்காக தவறான தகவலை வெளியிடுவதா என எடப்பாடி பழனிசாமி அரசுக்கு கண்டனம் எழுந்துள்ளது.