தமிழகத்தில் கொரோனா வைரஸ் தீவிரமான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. நாளொன்றுக்கு 500 பேருக்கு மேல் வைரஸ் தொற்றுக்கு பாதிக்கப்பட்டு வருவதால், மக்களிடையே மிகப்பெரிய அச்சத்தை உண்டாக்கியுள்ளது.
இந்த நிலையில், மக்களை மேலும் பல்வேறு இன்னல்களுக்கு தள்ளும் வகையில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசு, ஊரடங்கில் தளர்வுகளை கொண்டு வந்துள்ளது. குறிப்பாக, டாஸ்மாக் கடைகளை திறப்பது தமிழக பெண்களிடையே மிகப்பெரிய இடியை விழ வைத்திருக்கிறது.
கடந்த 40 நாட்களாக மதுபானம் கிடைக்கவில்லையென்றாலும் மக்கள் அமைதியுடனேயே வாழ்ந்து வந்தனர். ஆனால். அ.தி.மு.க. அரசோ தனது கஜானாவை நிரப்புவதற்காக டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதியளித்துள்ளது. மது குடிக்காமல் மக்களால் இருந்துவிட முடிகிறது. ஆனால் இந்த அரசால், மதுவை விற்காமல், அதன் மூலம் காசு பார்க்காமல் இருக்க முடியவில்லை என்பன போன்ற கருத்துகள் தொடர்ந்து எழுந்து வருகின்றன.
அதிலும், கடந்த ஒரு வார காலமாக மாநிலம் முழுவதும் கொரோனா பரவல் மிகத் தீவிரத்தை எட்டியிருக்கும் சமயத்தில், டாஸ்மாக் கடைகளை திறப்பதாக எடப்பாடி அரசு எடுத்திருக்கும் முடிவு மிகவும் கண்டனத்திற்குரியது என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உட்பட அனைத்து எதிர்க்கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், தி.மு.க. மக்களவைக்குழு துணைத்தலைவரான கனிமொழி எம்.பி., டாஸ்மாக் திறக்க அனுமதிகொடுத்த எடப்பாடி அரசு தனது உத்தரவை திரும்பப் பெறும்படி வலியுறுத்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
அதில், “மத்திய அரசிடம் இருந்து கிடைக்கப்பெற வேண்டிய நிதியை வாங்காமல், வாழ்வாதாரம் இன்றி வாடும் மக்களிடம் இருந்து வருவாயை பெற்றுக்கொள்ள நினைக்கிறது தமிழக அரசு. கொரோனா பரவல் அதிகரித்தும் வரும் நிலையில், அரசின் இம்முடிவு நிச்சயம் ஆபத்தை விளைவிக்கும்.
இந்த சூழலில் டாஸ்மாக்கை திறப்பதால் குடும்ப வன்முறையே அதிகரிக்கும். ஆகவே டாஸ்மாக்கை திறக்கும் முடிவை அரசு திரும்பப் பெற வேண்டும்.” என வலியுறுத்தியுள்ளார்.