உலகின் ஒட்டுமொத்த நாடுகளையும் தனது இரும்புக் கரங்களை கொண்டு ஆட்டுவித்து வருகிறது கொரோனா எனும் கொடிய நோய். இதற்கு எதிரான தடுப்பூசிகளை கண்டுபிடிக்க வல்லரசு நாடுகள் முதல் வளர்ந்து வரும் நாடுகள் வரை பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், கொரோனா வைரஸை எதிர்த்து போராடும் வல்லமை உடைய எதிர்ப்பு மருந்து (AntiBody) உருவாக்கும் முயற்சியில் தங்கள் நாட்டு விஞ்ஞானிகள் முன்னேற்றத்தை அடைந்துள்ளனர் என இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் நஃப்தாலி பென்னட் தெரிவித்துள்ளார். இதற்காக தனது விஞ்ஞானிகளை வெகுவாக பாராட்டியுள்ளார் பென்னட்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மோனோக்ளோனல் நியூட்ராலைசிங் என்ற ஆன்டிபாடி தொற்றுள்ளவர்களின் உடலில் செலுத்தும் போது, அதனால் கொரோனாவை அழிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த ஆன்டிபாடிக்கான காப்புரிமை பெறுவதற்கான செயல்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்றும், சர்வதேச அளவில் இதனை பெருமளவில் உற்பத்தி செய்ய ஐ.ஐ.பி.ஆரின் இயக்குநர் ஷ்முவேல் ஷாபிரா ஈடுபடுவார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது மட்டுமல்லாமல், இந்தியா மற்றும் அமெரிக்காவில் உள்ள சர்வதேச மருந்து நிறுவனங்களுடன் இந்த ஆன்டிபாடி உற்பத்தி குறித்து பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றனவாம். இருப்பினும், நடைமுறையில் இது எந்த அளவுக்கு சாத்தியப்படும் என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்க தகவலாக உள்ளது.