கொரோனா அச்சுறுத்தலால் 40 நாட்களுக்கும் மேலாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், எவ்வித பொது போக்குவரத்தும் இன்றி மாநிலங்கள் முழுவதும் முழுமையாக மூடப்பட்டுள்ளன.
இதனால் அத்தியாவசிய தேவைகளுக்கும் மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களிடையே செல்ல முடியாத நிலை உள்ளது. இப்படி இருக்கையில், சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த மகாராஷ்டிராவைச் சேர்ந்த பெண்ணின் தந்தை கடந்த 28ம் தேதி மாரடைப்பு காரணமாக உயிரிழந்திருக்கிறார்.
இதனையடுத்து, சொந்த ஊருக்குச் செல்ல நினைத்தாலும் ஊரடங்கால் போக முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. ஆகையால், மகாராஷ்டிர எம்.பி சுப்ரியா சுலேவுக்கு இது தொடர்பாக அந்தப் பெண் தகவல் அளித்திருக்கிறார்.
உடனே, சுப்ரியாவும் தி.மு.க நாடாளுமன்ற மக்களவைக் குழுத் துணைத்தலைவரும், மகளிர் அணி செயலாளருமான கனிமொழியை தொடர்புகொண்டு விவரத்தைக் கூறியுள்ளார். அதன் பிறகு, சோழிங்கநல்லூரில் உள்ள அந்த பெண் பணியாற்றும் நிறுவனத்தை தொடர்புகொண்டு கனிமொழி எம்.பி பேசியபோது சம்மந்தப்பட்ட பெண்ணுடன் துணைக்கு யாரேனும் இருந்தால் அனுப்பி வைக்கிறோம் என்று கூறியிருக்கிறார்கள்.
பின்னர், மகளிரணி நிர்வாகிகளிடம் தெரிவித்ததை அடுத்து, சோழிங்கநல்லூர் கிழக்குப்பகுதி தி.மு.க. அமைப்பாளரான கலைச்செல்வியும், காஞ்சிபுரம் மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் ஈஸ்வரி ஆகிய இரு பெண்களும் தனது தந்தையின் இறுதிச் சடங்குகளில் கூட பங்கேற்க முடியாமல் தவித்து வந்த பெண்ணைக் கொண்டு சேர்க்கும் பணிக்கு பொறுப்பேற்றிருக்கிறார்கள்.
அதன்படி, சுமார் 2,400 கிலோமீட்டர் தொலைவுக்கு பயணித்து அந்தப் பெண்ணை வீட்டில் விட்டுவிட்டு, கலைச்செல்வியும், ஈஸ்வரியும் ஊர் திரும்பி இருக்கிறார்கள். இந்த பயணத்துக்கான செலவனைத்தையும் கனிமொழி எம்.பியே ஏற்றுக்கொண்டுள்ளார்.
இந்தச் செய்தி மக்களிடையே பாராட்டுதலைப் பெற்றுள்ளது. மேலும், துணிச்சலாக பாதிக்கப்பட்ட பெண்ணை கொண்டு சேர்த்த தி.மு.க மகளிரணி அமைப்பாளர்களையும் பாராட்டி வருகின்றனர்.