Corona Virus

“5வது இடத்தில் இருந்த டெல்லி தற்போது 30வது இடத்தில்...” ஊரடங்கால் விளைந்த நன்மை தெரியுமா? #CoronaLockdown

கொரோனாவால் அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் காற்று மாசுபாடு காரணமாக உலகின் மிக மோசமான காற்று மாசுபாடு மிக்க நகரங்களின் பட்டியலில் 5வது இடத்தில் இருந்த டெல்லி, தற்போது 30வது இடத்திற்கு சென்றுள்ளது.

“5வது இடத்தில் இருந்த டெல்லி தற்போது 30வது இடத்தில்...” ஊரடங்கால் விளைந்த நன்மை தெரியுமா? #CoronaLockdown
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உலக அளவில் இந்தியா மக்கள்தொகையில் மட்டும் இரண்டாவது இடத்தில் இல்லை. காற்று மாசு அதிகமாக உள்ள நாடுகள் பட்டியலிலும் இந்தியாவிற்கு இரண்டாவது இடம்தான். என்னது இந்தியாவுக்கு இரண்டாவது இடமா? இந்தியாவுக்கு முதலிடமே இருக்கு. அது காற்று மாசுபாட்டால் ஏற்பட்ட இறப்புகள் என்ணிக்கையில். ஆம். இது பெருமைகொள்ள வேண்டிய தருணம் அல்ல இயற்கை அன்னையிடம் மண்டியிட வேண்டிய தருணம்.

இன்று கொரோனாவால் மக்கள் அல்லல்படுகின்றனர். இந்தியாவில் கொரோனாவால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1200-ஐ கடந்துள்ளது. இது பெரும் துயர்தரும் செய்திதான். ஆனால், இதே திருநாட்டில், காற்று மாசுபாட்டால் 2015-ம் ஆண்டில் நாள் ஒன்றுக்கு 1,641 பேர் உயிரிழந்துள்ளனர் என சியாட்டிலில் உள்ள வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் ஆரோக்கிய அளவியல் மற்றும் மதீப்பீட்டு கழகம் அளித்த தரவுகளை ஆய்வு செய்ததன் அடிப்படையில் இப்படியொரு அதிர்ச்சியான தகவலை வெளியிட்டுள்ளது, கிரீன்பீஸ் இந்தியா அமைப்பு.

2010-ம் ஆண்டு காற்று மாசுபாடு காரணமாக சீனாவில் நாள் ஒன்றுக்கு 1,595 பேரும், அதே ஆண்டில் இந்தியாவில் 1,432 பேரும் உயிரிழந்துள்ளனர். 1990-ல் 1,070-ஆக இருந்த உயிரிழப்பு, கடந்த 2015-ல் 1,641 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் காற்று மாசுபாடு பற்றி எந்த ஒரு விழிப்புணர்வையும் ஏற்படுத்தாததே இந்தியா முதலிடம் பிடித்திருப்பதற்கு காரணம்.

“5வது இடத்தில் இருந்த டெல்லி தற்போது 30வது இடத்தில்...” ஊரடங்கால் விளைந்த நன்மை தெரியுமா? #CoronaLockdown

உலகளவில் அதிக காற்று மாசுபாடடைந்த 10 நகரங்கள் இந்தியாவில்தான் உள்ளன. 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட இந்திய நகரங்கள் காற்று மாசுபாட்டால் பாதிப்படைந்துள்ளதால் இந்தியர்களின் ஆயுட்காலம் 4 ஆண்டுகள் வரை குறைய வாய்ப்பு இருக்கிறது. இந்தியாவில் 3 கோடி பேர் ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதேசமயம் காற்றுமாசுபாடு தொடர்ந்தால் 70 லட்சம் பேர் இறக்கக்கூடும் எனவும் உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. நெஞ்சில் நஞ்சை நாமே புதைத்துக் கொண்டிருக்கிறோம்.

மோட்டார் வாகனங்கள் வெளியிடும் புகை, தொழிற்சாலைகள் வெளியிடும் புகை ஆகியவைதான் காற்று மாசுபடுதலுக்கு மிக முக்கிய காரணம். இவைதான் நாம் சுவாசிக்கும் காற்றினை நஞ்சாக்குகிறது. தொழிற்சாலைகள் வெளியிடும் நைட்ரஜன் மற்றும் கந்தக ஆக்ஸைடு, வாகனங்களிலிருந்து வெளிவரும் கார்பன் மோனாக்ஸைடு, உலோகம் பிரித்தெடுக்கும் ஆலைகளிலிருந்து வெளிவரும் உலோகத் துகள்கள், ரசாயனத் தொழிற்சாலைகளிலிருந்து வெளிவரும் கரிமச் சேர்மங்கள் ஆகியவை காற்றை அதிகளவில் மாசுபடுத்துகின்றன. இந்தியாவைப் பொறுத்தவரையில் 70 சதவீத காற்று மாசுபாடு வாகனங்கள் வெளியிடும் புகையால் ஏற்படுகிறது. இந்தியாவிலேயே அதிக வாகன எண்ணிக்கையில் மூன்றாவது இடத்திலுள்ளது சென்னை மாநகரம்தான்.

காற்றைக் கூட விலைகொடுத்து வாங்க வேண்டிய நிலைமை வந்துவிட்டது. பூமி மாசுப் படலத்தில் சிக்கிக் கொண்டது. இந்நிலையில்தான் கொரோனா அசுர நர்த்தனம் ஆடத்தொடங்கியது. கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக போடப்பட்ட முழு ஊரடங்கு மக்களை சொல்லொணாத் துயரத்தில் ஆழ்த்தியிருந்தாலும் , ஒரு விதத்தில் காற்று மாசு குறைய பேருதவியை நல்கியிருக்கிறது. தொழிற்சாலைகள், விமானங்கள், கப்பல் போக்குவரத்து, ரயில் போக்குவரத்து மற்றும் வாகனங்களின் நச்சுப் புகையால் மூச்சுத் திணறி வந்த பெருநகரங்கள் சற்று நிம்மதிப் பெருமூச்சு விட்டுள்ளன. தொடர்ந்து வெளிவரும் புள்ளிவிபரங்களில் பெருநகரங்களில் காற்று மாசு 50 சதவீதம் குறைந்திருப்பதுடன், அபாயகரமான நிலையிலிருந்து சாதாரண நிலைக்கு வந்துள்ளது தெரியவந்துள்ளது.

“5வது இடத்தில் இருந்த டெல்லி தற்போது 30வது இடத்தில்...” ஊரடங்கால் விளைந்த நன்மை தெரியுமா? #CoronaLockdown

காற்றில் கரைந்துள்ள பி.எம் 2.5 அளவுடைய நுண்துகள்களின் அடர்த்தி தற்போது வெகுவாகக் குறைந்துள்ளது. இதனால், பூமி சூடாகும் பிரச்னைக்குக் காரணமான நச்சு வாயுக்களின் அளவு 50 சதவீதம் வரை குறைந்திருப்பதாக தெரிய வந்துள்ளது. சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த ஐக்யூ ஏர் வெளியிட்டுள்ள ஆய்வு தரவுகளின்படி, 2019ம் ஆண்டில் உலகின் மிக மோசமான காற்று மாசுபாடு மிக்க நகரங்களின் பட்டியலில் 5வது இடத்தில் இருந்த டெல்லி, தற்போது 30வது இடத்திற்கு சென்றுள்ளது. மிக அபாயகரமான நிலையில் இருந்து சாதாரண நிலைக்கு வந்துள்ளது.

மணலியில், கடந்த டிசம்பர் மாதம், காற்றிலுள்ள மாசுபாட்டின் அளவு 172-ஆகப் பதிவாகியிருந்தது. ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் 200-ஐத் தாண்டிய மாசுபாட்டு அளவு, மார்ச் மாதத்தில் தொடங்கிய ஊரடங்கு காரணமாக சிறிது சிறிதாகக் குறைந்து ஏப்ரல் மாதத்தில் தற்போதைய நிலவரப்படி காற்றிலுள்ள மாசுபாட்டு அளவு 90-ஆகக் குறைந்துள்ளது. அதேபோல், ஆலந்தூரில் டிசம்பர் மாதம் 145-ஆக இருந்த மாசுபாட்டு அளவு, 80-க்கும் கீழே குறைந்துள்ளது. வேளச்சேரியில், டிசம்பர் மாதத்தில் 148-ஆக இருந்த மாசுபாட்டு அளவு, இந்த மாதத்தில் 56-ஆகக் குறைந்துள்ளது. சென்னை மட்டுமின்றி, கோயம்புத்தூரிலும் டிசம்பர் மாதத்தில் இருந்ததைவிட ஏப்ரல் மாதத்தில் காற்றிலிருந்த மாசுபாட்டின் அளவு கணிசமாகக் குறைந்துள்ளது.

7 புனித நகரங்களுள் ஒன்றான வாரணாசி (காசி) யில் கங்கை நதி உள்ளது. காசி புண்ணிய ஸ்தலம் என்பதால் பலரும் கங்கையில் நீராடி செல்லுவர். மேலும் இறந்தவர்களின் உடல்களையும் கங்கையில் வீசுவதையும் காணமுடிகிறது. அதுமட்டுமின்றி பல தொழிற்சாலைகளின் கழிவுகள் , குப்பைகள் மற்றும் , பூஜை பொருட்கள், மனிதர்களின் அசுத்தமுறை போன்றவற்றால் கங்கை நதியின் தூய்மை மாசடைந்து வருகிறது. அதனால் தற்போது ஊரடங்கு காலங்களில் கங்கை நீர் சுத்தமாக உள்ளது. நீரில் உள்ள ஆக்சிஜன் அளவு கணிசமாக உயர்ந்துள்ளதும், மக்கள் குடிப்பதற்கு தகுதி வாய்ந்த நீராக, கங்கையில் பல பகுதிகள் மாறி இருப்பதையும், ஆராய்ச்சியாளர்கள் உறுதி செய்தனர். புனித நதியின் புனிதமே இப்போதுதான் புத்துயிர் பெற்றிருக்கிறது.

காற்றின் மாசு குறைந்துள்ள காரணத்தினால் பஞ்சாப் மாநில மக்களுக்கு ஓர் அரிய வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் பகுதி மக்கள் தங்கள் வீடுகளில் இருந்தவாறே 200கி.மீக்கு அப்பால் இருக்கும் இமயமலையின் ஒருபகுதியான தால் ஆதர் மலையைக் கண்டு ரசிக்கின்றனர்.

மனிதனுக்குக் கிடைத்த அருட்கொடை; அண்டத்தின் பொக்கிஷம்; மானுடத்தின் அன்னை இயற்கை. மனிதனோ செயற்கை தன்னுள் உயிர் படைக்க, இயற்கை அன்னையின் சுவாசத்தை மூர்ச்சையடையச் செய்தான். இந்த ஊரடங்கு இயற்கை அன்னையை மீண்டும் மெல்ல சுவாசிக்க வைத்திருக்கிறது. இயற்கையை பாதுகாத்து அதனால் வரும் வளர்ச்சியே ஆக்கப்பூர்வமானதாக இருக்கும். வரும்கால சந்ததியினருக்கு அவர்கள் வாழ தகுதியான பூமியாக சுத்தமான காற்று, நீர், இயற்கை வளங்கள் கொண்ட புத்துயிர் பெற்ற பூமியை விட்டுச்செல்ல வேண்டும். இயற்கை நமக்கு அளித்த இந்த வாய்ப்பினை பயன்படுத்தி நாம் இழந்த நந்தவனத்தை மீட்டெடுப்போம்; பேணி பாதுகாப்போம்.

- அஜய் வேலு

banner

Related Stories

Related Stories