சென்னையில் கொரோனா பாதிப்பு நாள்தோறும் அதிகரித்து வருகிறது. இன்று தமிழகத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்ட 161 பேரில் 138 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். இதனால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கியுள்ளது சென்னை மாநகராட்சி.
அடுத்த 10 நாட்ளுக்குள் கொரோனோ பரவலை முற்றிலும் தடுத்திடும் வகையில் களபணியாற்றிட வேண்டும் என சென்னை மாநகராட்சி ஆணையர் சிறப்புக்குழுவிற்கு அறிவுறுத்தியுள்ளார்.
கொரோனோ நோய்த் தொற்று அதிகமுள்ள பகுதிகளைத் கண்காணித்து நோய் பரவலை கட்டுப்படுத்த உயர்மட்ட அதிகாரிகளை உள்ளடக்கிய சிறப்புக் குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது.
அதன்படி, சென்னையில் அமைக்கப்பட்ட கொரோனோ நோய்த் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கை கண்காணிப்புக் குழுவுடனான ஆலோசனைக் கூட்டம் சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், கட்டுப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளைக் கண்காணித்தல், நோய்ப் பரவலை கட்டுப்படுத்துதல் அதற்கென புதிய திட்ட வழிமுறைகளை உருவாக்குதல், முன்னின்று களபணியற்றுவபவர்களை பாதுகாத்தல் உள்ளிட்ட 8 அம்சங்களை மண்டல வாரியாக முறையாகப் பின்பற்றி கண்காணித்திட வலியுறுத்தப்பட்டது.
மேலும், கொரோனோ பரவலை 10 நாட்களுக்குள் முற்றிலுமாக சென்னையில் தடுத்திட வேண்டும் எனவும், அதற்காக இந்தச் சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் களப்பணியாற்றிட வேண்டும் எனவும் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும், கொரோனா தடுப்பு பணிகளுக்காக பள்ளிகளை பயன்படுத்த உள்ளதால் சென்னை மாநகர எல்லைக்குள் செயல்படும் அரசு, தனியார் பள்ளிகளை மே 2ஆம் தேதிக்குள் அரசின் வசம் ஒப்படைக்க மாவட்ட ஆட்சியருக்கு, சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஆணை பிறப்பித்துள்ளார்.