தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மற்ற மாவட்டங்களை ஒப்பிடுகையில் சென்னையில்தான் மிகத் தீவிரமாக உள்ளது. இதுவரை 600க்கும் மேலானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால், இது சமூகப் பரவல் நிலையில் உள்ளதா என்ற அச்சமும், கேள்வியும் எழுகிறது.
வெளிநாடுகளுக்கோ, வெளிமாநிலங்களுக்கோ சென்றிராத சலூன் கடைக்காரர், பூ வியாபாரி எனப் பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட போதும், அரசுத் தரப்போ இன்னும் கொரோனா பரவல் இரண்டாம் நிலையில்தான் உள்ளது எனக் கூறி வருகிறது.
இந்த நிலையில், சென்னை ரிப்பன் மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்த மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், சென்னையில் 44 பேருக்கு எப்படி கொரோனா தொற்று ஏற்பட்டது என்று தெரியாமலேயே உள்ளது என அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார்.
மேலும், சென்னையில் கொரோனா தொற்று உறுதியாகும் 90 சதவிகிதம் பேருக்கு எவ்வித அறிகுறிகளும் இல்லாமலேயே வைரஸ் பாதிப்புக்கு ஆளாகியிருக்கிறார்கள்.
கிராமப்புறங்களை விட சென்னையில் அதிகமான மக்கள்தொகை உள்ளது. ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 26 ஆயிரம் முதல் 55 ஆயிரம் பேர் வரை வசிக்கின்றனர். அதனால்தான் அதிக எண்ணிக்கையில் சென்னையில் கொரோனா தொற்று ஏற்படுகிறது.
கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர், அண்ணா நகர், தேனாம்பேட்டை மற்றும் கோடம்பாக்கம் ஆகிய 6 மண்டலங்களில் கூடுதல் கவனம் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
மக்கள் வீடுகளை விட்டு வெளியே வருவதைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கடைகளில் சரியான முறையில் தனிமனித இடைவெளி கடைபிடிக்கப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க தனிக் குழு அமைக்கப்பட்டுள்ளது” என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.