சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்த கோவிட் 19 ஏறக்குறைய உலகின் 180க்கும் மேலான நாடுகளை அச்சுறுத்தி, லட்சக்கணக்கானவர்களின் உயிர்களைக் காவு வாங்கியுள்ளது. 24 லட்சத்துக்கும் மேலான மக்கள் இந்த கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த வைரஸால் மக்கள் மட்டுமல்லாமல் உலகில் பொருளாதார நிலை வரலாறு காணாத வகையில் மிகவும் மோசமான நிலையை அடைந்துள்ளது. உலகின் வல்லரசு நாடுகளின் தலைமையாக விளங்கும் அமெரிக்காவையே இந்த வைரஸ் தொற்று ஆட்டம் காண வைத்துள்ளது.
இதுவரையில் இல்லாத அளவுக்கு கச்சா எண்ணெய்யின் விலை பூஜ்ஜியம் டாலருக்கு கீழ் பதிவானதும் ஆச்சர்யத்திலும், பேரதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இதற்கெல்லாம் மூலகாரணமாக விளங்குவது கொரோனா வைரஸால் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு.
பொருளாதாரத்தின் உச்சாணிக் கொம்பில் இருக்கும் அமெரிக்காவுக்கே இந்த நிலை என்றால், வளரும் நாடுகளின் நிலையோ அதலபாதாளத்திற்குச் சென்றடைந்துவிட்டது. வேலையில்லாததால் கையில் பணமும் இல்லை. இதனால் உணவும் கிடைக்காமல் கூலித்தொழிலாளர்கள் பசியால் வாடி வதங்கி உயிரிழக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ், ஜார்ஜியா உள்ளிட்ட மாநிலங்களிலும், ஐரோப்பிய ஒன்றியத்தின் இத்தாலி, ஸ்பெயின், ஜெர்மனி போன்ற நாடுகளிலும் கொரோனா காரணமாக அமலில் உள்ள ஊரடங்கில் தளர்வு ஏற்படுத்த திட்டமிட்டு வருகின்றன.
இந்தச் சூழலில், உலக சுகாதார நிறுவனத்தின் மேற்கத்திய பசிபிக் பிராந்தியத்தின் இயக்குநரான மருத்துவர் தக்கேஷி கசாய் வைரஸ் பாதிப்பு முழுமையாக நீங்குவதற்கு முன்பே ஊரடங்கில் தளர்வு கொண்டு வந்தால் கொரோனா தாக்கம் மீண்டும் உயிர்ப்பித்து தற்போது நிலவும் அவலங்களை விட மிக மோசமான சூழலைச் சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஊரடங்கு உத்தரவை தளர்த்துவதற்கான நேரம் இதுவல்ல. வைரஸ் பரவலை முற்றிலுமாக தடுத்து நிறுத்துவதில் அரசுகள் முன்னெச்சரிக்கையுடனும், விழிப்புடனும் செயல்படவேண்டிய தருணமிது என தக்கேஷி கூறியுள்ளார்.
இதேபோன்று, ஜெனீவாவில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ராஸ் ஆதானம், கொரோனா வைரஸ் பற்றிய போதிய புரிதல் இன்னும் மக்களிடையே ஏற்படவில்லை. ஆகவே இந்த வைரஸின் மூலம் ஏற்படபோகும் மோசமான விளைவுகள் இனிமேல்தான் வரப்போகிறது என எச்சரிக்கை விடுத்துள்ளார்.