கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் இந்தியாவில் அதிகரித்து வருகிறது. இதனால் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு நீட்டிப்பால் மக்கள் மிகுந்த சிரமங்களை சந்தித்து வருகின்றனர். அதேநேரத்தில் உதவியின்றி தவிக்கும் மக்களுக்கு பலரும் உதவி செய்துவரும் மனிதநேயமிக்க நிகழ்வுகளும் நடந்துவருகின்றன.
அதேநேரத்தில், மனிதத்தன்மையற்ற சில விரும்பத்தகாத நிகழ்வுகளும் நடந்துவருகின்றன. குறிப்பாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை காக்கும் பணியில் இருக்கும் மருத்துவர்கள் மீது நடக்கும் தாக்குதல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதுமட்டுமின்றி தற்போது அதைவிட மோசமாக கொரோனாவால் பாதிக்கபட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து அதன் மூலம் கொரோனா தொற்று ஏற்பட்டு உயிரிழந்த மருத்துவர்களுக்கு இறுதி சடங்கு செய்யவிடாமல் தடுக்கும் மனிதநேயமற்ற கொடூர சம்பவமும் அரங்கேறியுள்ளது.
சென்னையில் நோய்தொற்றால் உயிரிழந்த மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய விடாமால் சிலர் பிரச்சனை சம்பவம் நாடுமுழுவதும் அதிர்ச்சியையும் கோபத்தையும் உண்டாக்கியுள்ளது. மருத்துவர்களுக்கு பாதுகாப்பும் உயிரிழக்கும் மருத்துவத்துறைச் சேர்ந்தவர்களுக்கு மரியாதையாக இறுதி சடங்கு செய்யவேண்டும் என கோரிக்கை எழுந்த நிலையில் சிலர் தங்களது நிலத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை புதைக்க அனுமதி கொடுத்துள்ளனர்.
அந்த வகையில் ம.தி.மு.க மாநில இளைஞரணிச் செயலாளர் ஈஸ்வரன், கொரோனாவால் உயிரிழந்தவர்களை புதைக்க தனது நிலத்தை பயன்படுத்திக்கொள்ள அனுமதி கொடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடலை அடக்க செய்ய அரசுக்கு இடம் தேவைப்படுமெனில் கோவையில் உள்ள எனது ஒரு ஏக்கர் நிலத்தை அரசு பயன்படுத்திக் கொள்ளலாம்.
மருத்துவரின் இறுதி அடக்கத்தின்போது ஏற்பட்ட சம்பவம் மிகவும் வருத்தமளிக்கிறது. மக்களுக்காக உயிர்நீத்த மருத்துவர்களின் உடலுக்கு உரிய மரியாதையும் அடக்கம் செய்யவேண்டும். அதுவே மனிதநேயம். ஆனால் அதனைச் செய்யாமல் ஊழியர்கள் மீது தாக்குவதும்; ஆம்புலன்ஸை சேதப்படுத்துவதும் என்ன மாதிரியான புரிதல் என்றே தெரியவில்லை.
ஊரடங்கை மீறி கூட்டமாக முண்டியடிக்கும்போது இல்லாத முன்னெச்சரிக்கை ஒருவர் உயிரிழந்த பின்னால் மட்டும் வருவது ஏன்? இந்தச் செயல் மனிதநேயமற்றது என்பதை மக்கள் உணரவேண்டும். அரசும் மக்களுக்கு கொரோனாவை வைத்துப் பயம்காட்டாமல் அதை எப்படி எதிர்க்கொள்வது என்பதை விளக்கவேண்டும்.
ஏனெனில் ஊரடங்கு முடிந்தால் கொரோனா பாதிப்பு முடிந்துவிடாது; சமூகத்தில் ஏதாவது ஒரு இடத்தில் தொற்றிக்கொண்டே இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார். அவரின் இந்த அறிவிப்புக்கு சமூக வலைதளங்களில் பாராட்டும் வாழ்த்துகளும் குவிந்துவருகின்றது.