கொரோனா அச்சம் காரணமாக இந்தியாவில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. முதல்கட்டமாக மார்ச் 25 முதல் ஏப்ரல் 14 வரை இருந்த ஊரடங்கு தற்போது மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஊரடங்கால், நாடு முழுவதும் உள்ள தினக்கூலித் தொழிலாளர்கள் மிகப்பெரிய அளவில் பாதிப்பை சந்தித்து வருகிறார்கள்.
பிழப்புக்காக வெளிமாநிலங்களுக்குச் சென்றுள்ளவர்கள், ஊரடங்கால் வேலை இல்லாமல் போனதால் உண்ண உணவு இல்லாமல் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். சொந்த ஊர்களுக்கு செல்லலாம் என்றாலும் கையில் பணமும் இல்லாததால் வேறு வழியில்லாமல் கால்நடையாகவே பல நூறு கிலோ மீட்டர் தொலைவுக்கு படையெடுத்துச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
மக்களுக்கான அனைத்து தேவைகளும் செய்துதரப்படும் என்று மத்திய மாநில அரசுகள் அறிவித்தது அறிவிப்புகளாகவே உள்ளதால், தொழிலாளார்கள் உடல் மற்றும் மனச் சோர்வுக்கு ஆளாகியுள்ளனர். குடிப்பதற்கு தண்ணீர் கூட இல்லாமல் நூற்றுக்கணக்கான கி.மீ தொலை நடப்பதால் புலம் பெயர் தொழிலாளர்கள் உயிரிழக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கி உயிரிழப்பதற்கு முன்பு, பசியால் வாடி வதங்கி உயிரிழந்துவிடுவோமோ என்ற நிலை தொழிலாளார்கள் மனதில் ஏற்பட்டு இவ்வாறு சொந்த ஊருக்கு படையெடுத்து வருகின்றனர். அந்த வகையில், தெலங்கானாவில் உள்ள மிளகாய்ப் பண்ணையில் பணியாற்றி வந்த சட்டீஸ்கர் மாநிலம் பிஜாப்பூரைச் சேர்ந்த தொழிலாளர்கள் கடந்த ஏப்ரல் 15ம் தேதியன்று சொந்த ஊருக்குச் செல்லத் தொடங்கினர்.
மூன்று குழந்தைகள் உட்பட 8 பெண்கள் என 13 பேர் கொண்ட குழு தெலங்கானாவில் இருந்து சத்தீஷ்கருக்கு புறப்பட்டுள்ளது. சுமார் 150 கிலோ மீட்டர் நடந்ததில் ஏப்ரல் 18ம் தேதி சட்டீஸ்கர் மாநிலத்தை அடைந்துள்ளனர். அந்த குழுவில் இருந்த ஜமோலா என்ற 12 வயது சிறுமி பிஜாப்பூர் மாவட்டம் ஆடெடில் கிராமத்தைச் சேர்ந்தவர்.
150 கிலோ மீட்டர் தூரத்துக்கு உணவும், தண்ணீரும் இன்றி நடந்து வந்ததால் மாநில எல்லையை அடைந்தவுடன் சுருண்டு விழுந்து அந்த இடத்திலேயே உயிரிழந்தார். இதனைக் கண்ட சக ஊழியர்கள், அந்த சிறுமியின் பெற்றோருக்கு தகவல் கொடுக்கலாம் என நினைத்தாலும் தங்களிடம் இருந்த செல்போனில் பேட்டரி தீர்ந்துவிட்டததால், பண்டர்பால் என்ற கிராமத்தை எட்டியதும் ஜமோலாவின் பெற்றோருக்கு தகவல் கொடுத்திருக்கிறார்கள்.
இதனைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள், உடனடியாக போலிஸாருக்கு தகவல் கொடுத்ததும், சிறுமி மற்றும் தொழிலாளார்கள் இருக்கும் பகுதிக்குச் சென்று அவர்களை மீட்டுள்ளனர். பின்னர் மருத்துவ சோதனை செய்ததில் 100 கிமீ-க்கு மேல் நடந்து வந்ததால் சோர்வு காரணமாக உயிரிழந்திருக்கிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வு அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஜமோலாவை போன்று இன்னும் எத்தனை தொழிலாளர்களின் உயிரை இந்த ஊரடங்கு காவு வாங்கப் போகிறது என்ற அச்சமும் நீடித்துள்ளது.