கொரோனா நோய் பரவல் காரணமாக நாட்டின் உற்பத்தி மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் தடைபட்டுள்ளன. மக்கள் வீடுகளில் முடங்கி இருப்பதால் வேலை மற்றும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. மே 3-ம் தேதி வரை தேசிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனாவின் தாக்கம் 2 ஆண்டுகளுக்கு தொடரும் என்று கூறப்படுகிறது.
நிவாரண செலவுகளுக்காக PM cares என்ற பிரதமரின் நிதி கணக்குக்கு மத்திய அரசின் சார்பில் நன்கொடைகள் பெறப்படுகின்றன. தற்போது அந்த நிதிக்காக, மத்திய அரசு ஊழியர்களின் ஒரு நாள் ஊதியத்தை எடுத்துக் கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இது குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ள மத்திய நிதி அமைச்சகம், மார்ச் 2021-ம் ஆண்டு வரை மத்திய அரசு ஊழியர்களின் ஒரு நாள் ஊதியத்தை PM cares நிதிக்கு வழங்க வேண்டும் என்றும், விருப்பமில்லாதவர்கள், வரும் மார்ச் 20-ம் தேதிக்குள் எழுத்து மூலம் எழுதிக் கொடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளது. அதன்படி ஏப்ரல் மாதத்துக்கான ஊதியம் வழங்கும் போதே ஓரு நாள் ஊதியம் பிடித்தம் செய்யப்பட்டே வழங்கப்படும்.
ஒருநாள் ஊதியத்தை நன்கொடயாக கொடுங்கள் என்று கேட்காமல், எடுத்துக் கொண்டோம், விருப்பமில்லை என்றால் எழுதி கொடுங்கள் என்ற மத்திய அரசு எண்ணம் சரியா என்ற கேள்வி எழுந்துள்ளது.